22 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற பெயருடைய யானை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானையை விமானத்தில் அனுப்புவதற்கு 700,000 டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தாய்லாந்தினால் பரிசாக வழங்கப்பட்ட அந்த யானையை இலங்கை சரியாகப் பராமரிக்காத காரணத்தால் அது நோய்வாய்ப்பட்டுள்ளது என்றும் அதனாலேயே அதை தாய்லாந்து திரும்ப எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சிங்கள பௌத்த பண்பாட்டில் குறிப்பாக அதன் மதச் சடங்குகளில் யானைக்குப் புனிதமான ஒரு இடம் உண்டு. ஆனால், தானமாகக் கிடைத்த ஒரு யானையை பராமரிக்க முடியாத நாடு புதிது புதிதாக விகாரைகளை கட்டிக் கொண்டிருக்கிறது என்று முகநூலில் விமர்சிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிகளின் மத்தியிலும்,ஐநா கூட்டத் தொடரின் மத்தியிலும், குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பொறுப்பு கூறல் தொடர்பில் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை அழுத்தமாகத் தெரிவித்திருக்கும் ஒரு பின்னணியிலும், இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் புதிதாக விகாரைகளைக் கட்டுவதை நிறுத்தவில்லை. அதாவது, சிங்கள பௌத்த மயமாக்கலை நிறுத்தவில்லை.
ரணில் விக்கிரமசிங்க அப்படித்தான் நடந்து கொள்வார். ஏனென்றால் அவருக்குத் தெரியும் வெளி உலகில் தனது பேரபலம் அதிகமாக உள்ளது என்று. ராஜபக்சங்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உண்டு. கனடா மூத்த ராஜபக்சக்கள் இருவரும் கனடாவுக்குள் வருவதற்கோ அல்லது முதலீடுகளை செய்வதற்கோ தடை விதித்து இருக்கிறது. அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றிய ஒரு சட்டத்தின் பிரகாரம் மூத்த இரண்டு ராஜபக்சங்களும் இனி அமெரிக்காவுக்கு போவதும் கடினம். இப்படிப் பார்த்தால் ராஜபக்சக்களின் பேரபலம் வெளி உலகில் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. ஆனால் உள்நாட்டில் அவர்களுடைய கட்சிதான் நாடாளுமன்றத்தில் மிகப்பலமாக உள்ளது. அந்த கட்சியின் ஆதரவோடுதான் ரணில் ஆட்சி செய்கின்றார். இது ஒரு சுவாரசியமான முரண். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆபத்தான முரண்.
ராஜபக்சங்களுக்கு வெளி உலகில் ஆதரவு இல்லை, அபிமானமும் இல்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வெளி உலகில் ஆதரவும் அபிமானமும் அவரை நோக்கிய எதிர்பார்ப்பும் அதிகமாக உண்டு. எனவே ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் தாங்கள் இழந்த பெயரை மீட்டுக் கொள்வதற்கு ரணில் தேவை. நாமலை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகத் தயார்படுதுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்திலும், கட்சியையும் குடும்பத்தையும் பலப்படுத்துவதற்கும் ரணில் தேவை.அதே சமயம் ரணிலோ நாடாளுமன்றத்தில் ஒற்றை யானையாக நிற்கிறார். அவருடைய கட்சி பெருமளவுக்கு சிதைந்து விட்டது. எனவே அவருக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்றால், ராஜபக்சகளின் ஆதரவு தேவை. எனவே ராஜபக்சங்களுக்கும் ரணிலுக்கும் இடையிலான பரஸ்பர தங்கு நிலை தொடர்ந்து உண்டு. இந்த பரஸ்பர தங்கு நிலை காரணமாக தமிழ் மக்களுக்கு பாதிப்பு அதிகம்.
எப்படியென்றால், ரணில் வெளி உலக அபிமானத்தை பெற்றவர். அவர் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்தவர். எனவே பன்னாட்டு நாணய நிதியமும் உலக வங்கியும் அவர் ஆட்சியில் இருப்பதைத்தான் விரும்பும். அதுபோலவே மேற்கு நாடுகளும் இடதுசாரிகளான ஜேவிபியினர் பலமடைவதை விடவும் ரணில் ஆட்சியில் இருப்பது பரவாயில்லை என்று கருதுவதாகத் தெரிகிறது. மேலும் ரணில் சீனாவை நோக்கி ஒரு கட்டதுக்கும் மேல் வளைய மாட்டார்.இதனால் ரணிலுக்கு இப்பொழுது மேற்கு நாடுகளில் பேரம் அதிகம். அந்தத் துணிச்சலில்தான் அவர் சிங்கள பவுத்த மயமாக்கலை தீவிரமாக முன்னெடுக்கின்றார். சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுப்பதன் மூலம் அவர் ராஜபக்சக்களின் நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓடலாம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம்.
சிங்கள பௌத்த மயமாக்கலை ராஜபக்சக்கள் முன்னெடுத்து இருந்திருந்தால் வெளிஉலகம் அதனை ஒரு விவகாரமாக மாற்றி இருக்கும். ஆனால் இப்பொழுது பன்னாட்டு நாணய நிதியமோ அல்லது மேற்கு நாடுகளோ அதை ஒரு விவகாரமாக எடுக்கவில்லை. அது கிட்டத்தட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு லைசென்ஸ் கொடுத்தது போல் ஆகிவிட்டது.
இந்த இடத்தில் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. பன்னாட்டு நாணய நிதியமானது, நாட்டின் நிதி சார் நடவடிக்கைகளில்தான் தலையிடும். மாறாக அரசியல் நடவடிக்கைகளில் தலையிடாது என்று. ஆனால் அது அப்பாவித்தனமான ஒரு விளக்கம். ஏனெனில் அரசியலில் தூய நிதி சார் நடவடிக்கைகள் என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசியல் தீர்மானத்துக்கு உட்பட்டவைதான். இன்னும் ஆழமான தத்துவார்த்த அர்த்தத்தில் சொன்னால், தூய பொருளாதாரம் என்று ஒன்று இல்லை. வேண்டுமானால் பாடப் புத்தகங்களில் அப்படி இருக்கலாம். ஆனால் அரசியலில் அரசியல் பொருளாதாரம்தான் உண்டு. எனவே பன்னாட்டு நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்கள் நேரடியாக அரசியலில் தலையீடு செய்ய முடியாவிட்டாலும் கூட, மறைமுகமாக அவை அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும்.
உதாரணமாக பன்னாட்டு நாணய நிதியம் படையினரின் எண்ணிக்கையை குறைக்குமாறும் ராணுவ மய நீக்கத்தை செய்யுமாறும் அரசாங்கத்தை நேரடியாக கேட்காமல் விடலாம். ஆனால் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கு ஒதுக்கப்படும் அளவுக்கதிகமான நிதியைக் குறைக்குமாறு பன்னாட்டு நாணய நிதியம் கேட்கலாம். பாதுகாப்புச் செலவினம் குறைக்கப்பட்டால் அது அதன் அடுத்த கட்டமாக படையினரைக் குறைக்க வேண்டி வரும். அது அதன் அடுத்த கட்டமாக படைமய நீக்கம் செய்ய வேண்டி வரும்.
எனவே பன்னாட்டு நாணய நிதியம் மறைமுகமாக அழுத்தங்களை கொடுக்க முடியும்.ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் ரணில் விக்கிரமசிங்க அப்படிப்பட்ட எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் இயங்குகிறாரா என்று கேட்கும் அளவிற்குத்தான் சிங்கள பௌத்த மயமாக்கல் நடக்கின்றது. இந்த விடயத்தில் அதையே ராஜபக்சக்கள் செய்திருந்தால் வெளியுலகம் அதை ஒரு விவகாரமாகக் காட்டியிருக்கும். ஆனால் ரணில் செய்கிறார். அதைத் தமிழ் மக்கள் மட்டும் தான் விவகாரமாகப் பார்க்கிறார்கள். ஐநாவின் மனித உரிமைச் செயலரின் வாய்மூல அறிக்கையில் காட்டமான விமர்சனங்கள் உண்டு. ஆனால் அது அரசாங்கத்துக்கு நோகாது. அரசாங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை நோக்கித்தான் திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறது. அந்த தேர்தலில் வெல்வது என்றால் தனி சிங்கள வாக்குகளை கவர வேண்டும் என்ற முடிவுக்கு ராஜபக்சக்களைப் போலவே ரணிலும் வந்து விட்டார் என்று தெரிகிறது.
ஏனென்றால் தமிழரசுக் கட்சி பெருமளவுக்கு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதைவிடத் தீவிரமான எதிர்ப்பு அரசியல். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் உண்டு. தமிழ்த் தேசிய அரங்கில் ஏனைய கட்சிகள் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தால் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டும் அதைத்தான் தொடரும். இப்படிப்பார்த்தால் தமிழ்க் கட்சிகள் இந்த முறை ரணிலோடு நிக்காது என்றே தெரிகிறது. எனவே தமிழ் வாக்குகளைக் கவர்வதில் இருக்கும் நெருக்கடிகளைக் கவனத்தில் எடுத்து அவர் தனிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைக்கக் கூடும். அதற்கு சிங்கள பௌத்த மயமாக்கல் தேவை.
மேலும், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் உள்நாட்டில் கடனை மீளக் கட்டமைக்கும் பொழுது, அதன் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் கோபமும் கொந்தளிப்பும் ஏற்படலாம். அதை எதிர்கொள்வதற்கும் ரணிலுக்கு இனவாதம் தேவை. கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கள மக்களின் கோபத்தையும் கொதிப்பையும் திசை திருப்புவதற்கு இனவாதத்தத்தான் இதற்கு முன் இருந்த எல்லா அரசாங்கங்களும் பயன்படுத்தின. ரணிலும் விதிவிலக்கு அல்ல. எனவே தமிழ் மக்களும் சமரசத்துக்கு இடமின்றி விட்டுக் கொடுப்பின்றிப் போராடுவதுதான் ஒரே வழி.