இன்றையதினம் சகோதர மொழி சட்டத்தரணிகளிடம், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாங்கள் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எதிராக போராடவோம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம். முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் கடந்த வாரம் இலங்கையினுடைய பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தமிழ் நீதிபதி தன்னை காணியில் இருந்து வெளியேற்ற முடியாது என்று இனவாதத்தை கக்குகின்ற வகையிலும் நீதித்துறையை அவமதிக்கின்ற வகையிலும், அச்சுறுத்துகின்ற வகையிலும் உரை ஒன்றை ஆற்றியிருந்தார்.
அவர் அதிலே உபயோகித்த தமிழ் நீதிபதி என்ற வாசகம் அதே பயங்கரமானது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக இன்றையதினம் முல்லைத்தீவிலே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம்.
இந்த இடத்தில் நாங்கள் சகோதர சட்டத்தரணிகள் சங்கங்களுக்கும், சகோதர சட்டத்தரணிகளுக்கும் விடுக்கின்ற தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், இந்த இடத்தில் நீங்கள் சுதாகரித்து சரத் வீரசேகரவுக்கு எதிராக குரல் கொடுக்காது இருந்தால் நாளைக்கு இதே சரத் வீரசேகர உங்களுக்கும் எதிராக திரும்பலாம்.
இன்று தமிழ் நீதிபதி என்று விழித்த சரத் வீரசேகர, சிங்கள நீதிபதி என்றோ, முஸ்லீம் நீதிபதி என்றோ அல்லது கரையோர சிங்கள நீதிபதி என்றோ கூட அச்சுறுத்துவார். ஆகவே சரத் வீரசேகரவின் கருத்துக்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்றுமாறு நாங்கள் கோரி நிற்கின்றோம் – என்றார்.