யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
வடக்கு கிழக்கில் தமிழர்களின் இனப் பிரச்சனை விடயத்திற்கு இந்தியா வைத்த தீர்வில் ஒன்றுதான் 13 ஆம் திருத்தச் சட்ட மூலமாக இலங்கையில் உள்ளது. அது முழுமையாக நடக்கின்றதா இல்லையா என்பது பெரிய கேள்வியாக இருப்பினும் அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்திற்கு ஒரு படியாக கருதப்படுகிறது.
இருப்பதில் இருந்து அடுத்தவற்றை கோருவதா அல்லது தமிழர் விடயத்தில் தற்போதை நிலைமைக்கேற்ற தீர்வைக் போருவதா அல்லது தமிழ் மக்களின் இறைமையை மதித்து தாயகம், தேசியம் , சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தீர்வை கோருவதா என்பதே தமிழ் அரசியல் கட்சிகளிடையே உள்ள தன்மானப் பிரச்சணையாகவுள்ளது.
இதற்கு தாயகத்தில் செயல்படும் எந்த தமிழ்க் கட்சியும் விதிவிலக்கல்ல என்பதே இன்றைய நிலைப்பாடாகவும் உள்ளது. இதேநேரம் இந்தியாவால் கொண்டு வரப்பட்டு சட்டப் புத்தகத்தில் எழுத்தில் உள்ள 13ஐ நிறைவேற்றுங்கள் என ஒரு்தரப்புக் கோரும் நேரம் தமிழர் பிரச்சணைக்கு சமஸ்டியே தீர்வாக முடியும் அதனை நிறைவேற்றுங்கள் என இன்னுமோர் தரப்பும்கோர சமஸ்டியே தீர்வாக முடியும் எனப் பாரதப் பிரதமருக்கும் 13ற்கு அப்பால் தீர்வை வழங்குவோம் என சிங்களத் தரப்பும் கூறியதனால் அதனை நிறைவேற்ற அழுத்தங்களை வழங்குங்கள் எனத் தமிழ் அரசும் கோரி தற்போது 3 கடிதங்கள் வரையில் பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கு செல்வது உறுதியாகி விட்டது. இனி சிவில் சமூகம் எனவும் வேறு அமைப்புக்களின் பெயரிலும் கடிதங்கள் செல்கின்றனவோ தெரியாது. மாறுபட்ட கோரிக்கைகளுடன் பல கடிதம் சென்று அவற்றை அனுப்புபவர்களின் அரசியல் நிலைப்பாடு மக்களின் மனநிலை என்பவற்றை கேட்டறியவே இலங்கை ஜனாதிபதியை பாரதப் பிரதமர் சந்நிப்பதற்கான கால இடைவெளி போதுமானதா எனபது வேறு விடயம்.
இந்தக் காலத்தில் கடிதங்களை தனித் தனியே எழுதினாலும் கடிதமே எழுதாத தரப்புக்களையும் உள்ளடக்கி பொதுக் கருத்தரங்குகளும் இடம்பெறுகிறது. அதனையும் வரவேற்றாலும் இன்று, இந்தியா இலங்கையை பகைத்து அல்லது முட்டிமோதி ஓர் தீர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்று தமிழ் மக்களிற்கு வழங்கும் வல்லமையில் அல்லது தேவையில் உள்ளதா எனபது தொடர்பிலும் ஆராய வேண்டும்.
இலங்கை அரசு பொருளாதாரத்தில் முழுமையாக ஆட்டம்கண்டு வீழும் நிலையில் இலங்கையை தூக்கிநிறுத்த முயலும் கடன் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று நாடுகளிற்குள் இந்தியா இருப்பதனால் இந்தியா கூறுபவற்றை இலங்கை ஏற்கும் என்பது ததிழர்களின் பிரதிநிதிகளின் கணக்காக உள்ளது. இதற்கு எதிர்க் கணக்கும் ஒன்று உள்ளது அதாவது அதுவே அரச தரப்பு பிரதிநிதிகளின் கணக்காகவும் உள்ளது. அதாவது இலங்கைக்கு கடன் வழங்கும் பிரதான 3 நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பரம எதிரியான சீனாவும் உள்ளதனால் சீனாவின் பக்கம் இலங்கை இழுத்துச் செல்லபடுவதனை கட்டுப்படுத்த வேண்டுமானால் இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டிய கட்டாயம் உள்ளது அதற்காகவே நாம் கை நீட்டும்போதெல்லாம் இந்தியா எமது கையை நிர்ப்ப தயாராக இருக்கின்றது என்று கொழும்பு கணக்கு போடுகிறது. அந்த கணக்கை பல தசாபதங்களாக சீனா எனும் பூதத்தைக் காட்டி தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தியும் கொண்டுள்ளது.
அந்த ஆயுத்த்தை பயன்படுத்தி எங்கெல்லாம் சீனா கால் ஊன்றப் பார்க்கின்றதோ அதனையே இந்தியா தடுக்க முயலுமே அன்றி இலங்கைத் தமிழர் விடயத்திற்காக இந்தியா இரங்கை அரசை பகைக்க மாட்டாது என இலங்கை அரசு திடமாக நம்புகின்றது. இதற்கு உதாரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் 3 தீவுகளில் மின்சார உற்பத்திக்கான திட்டத்தை சீனாவிடம் வழங்க அமைச்சரவையும் அனுமதி வழங்கி ஒப்பந்தமும் மேற்கொண்ட பின்னர் இந்தியா தலையிட்டு மிக இரகசியமாக அதனை தடுத்து நிறுத்தியது. அது இந்தியாவின் பூகோள அரசியல் நலன் சார்ந்தது.
இவற்றின் அடிப்படையில் தமிழர் தீர்வில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டுமானால் ஈழத் தமிழர்களும் இவற்றை ஒத்த காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிலே 13ஐ நடைமுறைப்படுத்துமாறு கோரும் தரப்புக்களோ அல்லது இந்தியாவின் கூற்றிலான தீர்வைத் தாருங்கள் எனக் கேட்பவர்கள் இந்தியாவிற்கு நிர்ப்பந்தம் அல்லது கட்டாய தேவை உள்ள விடயத்தினையும் தமது பட்டியலில் இணைக்கத் தவறுகின்றனர். ஆனால் இணைப்பதற்கு வழியுண்டு.
13ஆம் திருத்தச் சட்டத்தில் உருவான மாகாண சபை ஒன்றும் வடக்கு கிழக்கில் மட்டும் நடைமுறையில் உள்ள விடயம் அல்ல. அது இலங்கை முழுவதும் உள்ள விடயம். இதனால் இலங்கையின் இன்னுமோர் பகுதியான மலையகத்திற்கும் இது பொருத்தமானது. மலையகத்தில் உள்ள தமிழ் மக்களை இந்தியா இன்றும் தனது மக்களாக கருதுகின்றது. இதனால் இவர்களையும் உள்ளடக்கி அவர்களின் தலைவர்களையும் இணைத்து அங்கே உள்ள தேவைகளையும் சேர்த்து கூற முற்பட்டால் இரு இடங்களின் தமிழர்களிற்கான தீர்வாக அமையக்கூடிய விடயத்தை இந்தியா முன்னுரிமைப் பட்டியலில் இணைக்க கூடும். அது தமிழர்களிற்கு சாதகமாக அமையும். ஏனெனில் 1983களில் ஈழத் தமிழர்களின் விடயங்களில் இந்தியா கரிசணை செலுத்தியபோது ஈழத்தில் 40 லட்சம் தமிழர்கள் இருந்தனர். இன்று 40 வருடம் கழித்து அதே 40 லட்சம் தமிழர்கள்கூட தாயகத்தில் இல்லை என்ற நிலையில் இந்தியாவின் பார்வையை ஈர்க்க வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களிற்கும் சேர்த்து நன்மை பயக்கும் விடயத்தை முன் வைக்கும்போது பழைய நிலையை உருவாக்ககூடும்.
ஏனெனில், வடக்கு கிழக்கிலே ஏனைய கட்சிகள் எல்லாம் துடக்கு கட்சி அவர்கள் இந்தியாவின் சொல்லில் செயல்படுகின்றனர், எதனையும் இந்தியாவிடம் கேட்டு அல்லது இந்தியா ஊடாக செயல்படுத்த முனையும் துரோகிகள் என த.தே.ம.முன்னணி பகிரங்கமாகவே குற்றம் சாட்டும் அரசியலில் ஈடுபட்டு வந்தது. ஆனால் மோடிக்கு கடிதம் எழுத ஏனைய கட்சிகள் ஆயத்தமாவதனை அறிந்து ஓடிச் சென்று முதலில் கடிதம் கையளித்த கட்சி என்ற பெயரை பெற்றுக்கொண்டுள்ளது ’சைக்கிள்’ முன்னணி உள்ளது.
உள்ளூரில் பிரச்சனை என்றால் முதலில் ஆர்ப்பாட்டம் வைக்கும் முன்னணி கடித அரசியலிலும் ஓடிச் சென்று முதலில் கடிதம் வழங்கும் அளவிற்கு அரசியல் நிலையில் மாற்றம் பெற்றிருக்கின்றது என்றால் இதன் பின்னணியும் ஆராயப்படவேண்டியதாகவே உள்ளது. இது அந்தக் கட்சியின் பகிரங்க கொள்கைக்கு அவமானமாகவே கருதப்படும். ஏனெனில் துரோகிக்கு எப்படி கடிதம் எழுதுவது?
இந்தியா ”துரோகி , எதிரி , சதிகாரர்கள், ஏமாற்றுக்காரர்கள்” என்ற நிலையில் இருந்து தூதரகத்திற்குச் சென்று அப்படியானவர்களிற்கு கடிதம் எழுதவேண்டிய அளவிற்கு நிர்ப்பந்தத்தை காலம் ஏற்படுத்திவிட்டது.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள த.தே.ம முன்னணி எழுதிய கடிதத்தின் பின்னணி என்பது- கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையை உருவாக்கி விட்டது என்பதனை காட்டுவதாகவே உள்ளது. அது மாத்திரமின்றி கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையை உருவாக்கியுள்ளதையும் அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிகிறாது. அதாவது, தமிழர் பிரச்சனைகளிற்கான தீர்வு விடயத்தில் கண்டிப்பாக இந்தியாவின் கரிசணையைப் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்த அரசியல் அல்லது இராஜதந்திர உத்திகளையும் பயன்படுத்துவது உகந்ததோ எனவும் சிந்திக்க வேண்டிய அல்லது செயல்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.
அந்த அரசியல் உத்தியை, “அரசியலில் நிரந்திர எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை” என்கிற பொதுநிலை கோட்பாட்டிற்கு அமைவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியும் முன்னெடுப்பதில் ஆச்சரியமும் இருக்க முடியாது. எதிர்ப்பு அரசியலை மட்டுமே மையப்படுத்தி நீண்ட நெடுங்காலம் அரசியல் செய்ய முடியாது என்பது அரசியலில் பாலபாடம்.
இந்த நேரத்தில் மற்றொரு விடயத்தையும் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழர்களிற்கான தீர்வை வழங்க வேண்டும் என்ற சிந்தனை இந்தியாவிடம் இருந்தாலும், அவர்களுக்கும் ஒரு குழப்பம் உள்ளது என்பதை இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதில் முதலாவது தமிழர்களிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதென்றால், எந்த கட்சி அல்லது குழு முன்வைக்கும் அம்சங்களின் அடிப்படையில் அந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பதாகும். அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். இதில் வடக்கு-கிழக்கை மையப்படுத்தி அரசியலில் ஈடுபடும் எந்த தமிழ் கட்சியும் மலையக மக்களையும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் தீர்வு விடயத்தில் இணைத்துக்கொள்ள தயாராக இல்லை. இந்த அரசியல் தீண்டாமை இன்றளவும் தொடருகிறது. தங்களை சேர்க்காத போது நாம் தனியாக இந்தியாவுடன் பேசிக்கொள்வோம் என்கிற நிலைப்பாடு மலையக கட்சிகளிடமும் உள்ளது. ஆகவே முதலில் வடக்கு கிழக்கு அரசியல் பரப்பில் செயற்படும் கட்சிகளிடையே, தமது சொந்த தேர்தல் அரசியல் சார்ந்த நலனைவிட, மக்கள் நலன் சார்ந்த அரசியலே முக்கியம் என்கிற எண்ணப்பாடு எழ வேண்டும். விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தளவிற்கு வலுவாக இருந்தது என்பதை மக்கள் அறிவர்.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியம் பேசும் கட்சிகளிற்கு அப்பாற்பட்டு, தமிழர் நலன் என்று கூறும் கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கு ஓரளவிற்கு வாக்கு வங்கி உள்ளது. தீர்வு விடயத்தில் அவர்களின் கருத்தையும் கேட்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு எழுகிறது.
இதில் முஸ்லிம் கட்சிகள் மட்டும் இனப்பிரச்சனைக்கான தீர்விற்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போலவே நடந்துகொள்வதையும் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக அவர்கள் இந்தியாவுடன் தமது விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதில்லை. தமது மக்களிற்கான தேவைகளை அரபு நாடுகளின் தயவின் மூலம் அவர்கள் வெற்றிகரமாக பெற்றுக்கொண்டு தமது சமூகத்தை முன்னேற்றி வருகின்றனர்.
தற்போது கடிதம் எழுதும் விடயம் தொடர்பில், சைக்கிள், குத்துவிளக்கு, வீடு என்று அனைத்து கட்சிகளும் தனித்தனி நிலைப்பாட்டில் உள்ளன. தமது மக்களிற்கான தீர்வை பெற்றுத்தருவதற்கு ஒரு கடிதம் எழுதுவதில் கூட அவர்களிடையே ஒற்றுமை இல்லை என்று இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் புதுடில்லிக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி கடிதம் எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
அன்றே சொன்னான் பாரதி:
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே