கடந்த 24.06.2023 தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு வைபவத்தை பாடசாலை நேரத்தில் நடாத்தாமல் மாலை நேரம் பாடசாலைக் கல்விக்கு இடையூறு இன்றி நடாத்திய பாடசாலை முதல்வருக்கு பழைய மாணவர்களாலும் பாடசாலை சமூகத்தினாலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி சனி மாலை, வேலைகளுக்கு சென்று வரும் பெற்றோர்கள் பழைய மாணவர்களும் நிகழ்வில் பங்கு பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு 4 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை பரிசளிப்பு நிகழ்வினை நடத்தினர்.
இந்நிகழ்வினை நடாத்தி மாணவர்களுக்கு உரிய போக்குவரத்து ஒழுங்குகளுடன், தமது தனிப்பட்ட நேரத்தை அர்ப்பணிப்பு செய்து இந்நிகழ்வை நடாத்தி இருப்பதனை பழைய மாணவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் பாராட்டி கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில் “மகாஜனக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் நீண்ட காலத்தின் பின்னர் மாலை தொடக்கம் இரவு வரை சிறப்பாக நடைபெற்றது.
தனக்கென நீண்ட பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் கொண்ட மகாஜனக் கல்லூரியின் ஆரம்ப காலம் தொடக்கம் இரவு வேளையில் மிக முக்கிய அரசு தலைவர்களை பிரதம விருந்தினர்களாக அழைத்து இந்நிகழ்வானது சிறப்பாக நடைபெற்று வருகின்றமை மரபாக இருந்தது.
இடையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாகவும் இடப்பெயர்வுகள் காரணமாகவும் பகல் வேளையில் நடைபெற்றது.
இவ்வருடம் கல்லூரி நிறுவுனர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் பிறந்த நூற்றியம்பதாவது நிறைவை முன்னிட்டும் கல்லூரியின் பாரம்பரியம், மரபுகளை நிலை நிறுத்தும் பொருட்டும் அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் கலந்து கொள்ளும் வகையிலும் மைதானத்தில் அமைந்தது.
நன்கு திட்டமிடப்பட்ட ஒழுங்குபடுத்தலில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்களின் பாதுகாப்பு, ஒழுக்கம், போக்குவரத்து என்பன தொடர்பாக ஆசிரியர்களின் பார்வையில் மாணவத் தலைவர்கள், சாரணர்கள், மாணவப் படையணிகள், மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு மிகவும் சிறப்பான கட்டுப்பாடுகளுடன் வெகு சிறப்பாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரை 2400 ற்கும் மேற்பட்ட மாணவர்களையும் 100ற்கு மேற்பட்ட ஆசிரியர்களையும், கிட்டத்தட்ட 1000 பெற்றோர்களையும் பல நூற்றுக்கணக்கான பழைய மாணவர்களையும் ஒரே தரத்தில் உள்ளடக்கி சிறப்பான முறையில் மைதானத் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.
“மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்ற மகாஜன கவிஞர் மஹாகவி யின் வரிக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மிகச் சிறப்பாக பரிசளிப்பு விழா நடைபெற்றமை க்கு ஒத்துழைத்த பாடசாலை முதல்வருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் எமது பாராட்டுக்கள் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.