பொ.ஐங்கரநேசன் கண்டனம்
வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சு கூடடுறவுத் திணைக்களத்தையும் பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கங்களையும்;, பனை அபிவிருத்திச்சபையையும் இணைத்து ஆண்டுதோறும் யூலை 22 தொடங்கி 28 வரையான ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனைஅபிவிருத்தி வாரமாக 2015ஆம் ஆண்டிலிருந்து மிகச்சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளது. ஆனால், கடந்த சில வருடங்களாகப் பனை அபிவிருத்தி வாரத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் அதனைக் கொண்டாடாமல் தவிர்த்தோ அல்லது மாற்றியமைத்தோ மாகாணக் கூட்டுறவுத் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது பனைஅபிவிருத்தி வாரம் வடக்கு மாகாண அமைச்சரவையின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இதனைக் கைவிடவோ, மாற்றியமைக்கவோ கூட்டுறவுத் திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வடமாகாணக் கூட்டுறவுத் திணைக்களம் ஆடிப்பிறப்பை முன்னிட்டு யூலை 14 தொடங்கி 16 வரையான மூன்று நாட்கள் நல்லூர் கிட்டு பூங்காவில் பனையுற்பத்திப் பொருட்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்மக்களின் பண்பாட்டைப் ‘பனைப் பண்பாடு’ என்று சொல்லும் அளவுக்கு உணவு முதல் உறையுள் வரை எமது வாழ்வியலில் பிரதான இடம் பிடித்துவந்த பனைவளம் தற்போது எமக்கு அந்நியமான ஒரு வளமாக மாறியுள்ளது. பனைப் பொருட்களின் பயன்பாடு அருகிவருவதன் காரணமாக, இப்பனை வளத்தைத் தொழில் மூலாதாரமாகப் பயன்படுத்தி வந்த மக்கள் திரளின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அத்தோடு, போரக்காலத்தில் பெரும் அழிவைச் சந்தித்த எமது பனைவளம் போருக்குப் பின்னரும் அனுமதியின்றிப் பெருமளவுக்கு அழிக்கப்படுகிறது. இது இயற்கைச் சூழலின் சமநிலையைப் பெரிதும் பாதிப்பதாக உள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டே பனை வளத்தைப் பெருக்கவும், நவீனகாலத்துக்கு ஏற்பப் பனைப் பயன்பாட்டை நுகர்வோரை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யவும், இதன்மூலம் பனைப் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் அறிஞர்களினதும் பொதுமக்களினதும் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும் தாலகாவலர் அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களின் நினைவு தினமான யூலை 22ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை 2015ம் ஆண்டில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்கள் பனை அபிவிருத்திச்சபை தோற்றம் பெறுவதற்கு முன்பாகவே தனியொருவராகத் தமிழர் தாயகம் முழுவதும் பனை விதைகளை விநியோகித்து பனந்தோப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தார். இவர் பனை அபிவிருத்திச் சபையி;ன் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து பனை அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியவர். இவர் ஆற்றிய பணிகளுக்காக அமரத்துவத்தின் பின்னர் இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. தாலகாவலரான அன்னாருக்கு உயரிய கௌரவம் வழங்கும் பொருட்டே வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்துக்குரிய காலப்பகுதியாக, அவரது நினைவு தினமான யூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஒப்புதலுடன் உயரிய நோக்குடன் கொண்டாடப்பட்டு வந்த பனை அபிவிருத்தி வாரத்தைத் தனியே ஆடிப்பிறப்புக் கூழுக்குத் பனங்கட்டி விற்பதுடன் சுருக்கிக் கொள்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. இதன் பல்பரிமாணத்தை வடமாகாணக் கூட்டுறவுத் திணைக்களம் புரிந்துகொண்டு அடுத்த ஆண்டிலிருந்தாவது உரிய காலப்பகுதியில், உரியமுறையில் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வரங்குகளோடு மிகச் சிறப்பாகக் கொண்டாட முன்வர வேண்டும். தவறின் தமிழரின் மாண்புமிகு அடையாளமான பனைக்குத் தவறிழைத்த வரலாற்றுப் பிழையைச் சுமக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.