தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவிப்பு
ரணில் விக்கிரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆகிய கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் எங்களைத் தவிர தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்று, ரணில் விக்கிரமசிங்கவையும் இலங்கையையும் சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச அமைப்புகளிடமிருந்து காப்பாற்றி, இலங்கைக்கு கடன் பெற்றுக் கொடுத்துவிட்டு இன்றைக்கு தமிழினத்தின் எதிர்கால இருப்பு இல்லாமல் மூழ்கடித்திருக்கின்றார்கள் என்று தான் கூற வேண்டும்.
தங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய பேச்சு வார்த்தைக்கு நிபந்தனை இல்லாமல் செல்வது அரசை காப்பாற்றுகின்ற ஒரு முயற்சியாக தான் அமையும். நாங்களும் தமிழ் மக்களும் சமஷ்டிக்கு குறைந்த எந்த ஒரு தீர்வையும் எண்ணி பார்ப்பதற்கு கூட தயார் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க வோடு தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி , மற்றைய தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணி போன்ற காட்சிகள் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 வது திருத்தத்தை பற்றி கதைக்குச் சென்றது மிகவும் பிழை. இது தமிழ் மக்களுக்கு செய்த ஒரு வரலாற்று துரோகம்.
ஆகவே இப்பொழுது சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு விட்டு ஒற்றை ஆட்சிக்கு கீழ் கதைக்க போனவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க செருப்பால் அடித்து துரத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பொலிஸ் அதிகாரத்தை, காணி அதிகாரத்தை தர முடியாது என்று சொல்லி இருக்கின்றார்.
ஆகவே இந்த தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளிடம் வினையமாக விடுக்கின்ற கோரிக்கை என்னவென்றால் இனியாவது திருந்திக் கொள்ளுங்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு நடவுங்கள்.
மீண்டும் மீண்டும் போய் ரணில் விக்கிரமசிங்கமையும் ராஜபக்சகளையும் சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிவிட்டு தமிழினத்தை மீண்டும் மீண்டும் அடக்கு வைக்காதீர்கள் – என்றார்.