நடராசா லோகதயாளன்
வவுனியாவில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைக்க ரணில் விக்ரமசிங்க அரசு எடுத்துள்ள முயற்சி தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொழிற்சாலை அங்கு அமைக்கப்பட்டால் அப்பகுதியின் நீர்வளம் மிகவும் பாதிக்கப்படும் என்று பல்துறை வல்லுநர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இப்போது வனஜீவராசி அமைச்சும் இது குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளத்து
“நயினாமடு சீனித் தொழிற்சாலைக்காக 500 ஏக்கர் காடு அழப்பால் மனித-யானை மோதல் உருவாகும்” என வனவளம் மற்றும் வன ஜீவராசி அமைச்சு அறிக்கையில் கூறியுள்ளது.
வவுனியா வடக்கில் சீனித் தொழிற்சாலைக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 200 ஹெக்டேயர் காட்டினையும் அழத்தால் அதனை அண்மித்த பகுதி மனிதர்களிற்கும் யானைகளிற்குமான மோதல் ஏற்படும் களமாக மாறும் என வனவளம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சட்டத்தரணி பவித்திரா வன்னியாராச்சி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
2023-06-26 ஆம் திகதிய MWFRC/ADM/06/06/64 இலக்க கடிதம் மூலமே இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் “சீனித் தொழிற்சாலைக்காக தெரிவு செய்யப்பட்ட 200 ஹெக்டேயர் அல்லது 500 ஏக்கர நிலப் பிரதேசத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததில் அந்த இடம் காடு சார்ந்த வனப்பகுதி எனபதோடு ஏற்கனவே மத்திய தர வகுப்பினருக்கு வழங்குவதற்காக விடுவிக்கப்பட்ட காணிகளாகும். பாவணை முறைமைக்கு மாறாக்காடாகும். அதனூடாக காடுகள் அழிப்பு என்பது மனிதர்கள் யானைகளுடனான மோதல்கள் தீவிரமடையும் எனக் கண்டறிகின்றேன்” என்று தனது அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே காடுகள் அல்லாத காணகளை இதற்கு தெரிவு செய்வதே சிறந்தது என அவதானிக்கப்படுகின்றது. எனப் பரிந்துரைக்கப்பட்டபோதும் இறுதியில் வேறு காணிகள் தேட முடியாவிட்டால் இதனை முன்மொழிய 1980ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைய சுற்றாடல் விதிமுறைக்கேற்ப பரிந்துரைக்கின்றேன் என்று கூறி பவித்ரா வன்னியாராச்சி அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இதேநேரம் வவுனியா வடக்கில் அமையும் சீனித் தொழிற்சாலையின் உற்பத்திக்கான கரும்புச் செய்கைக்கு 74 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுப்பதற்கும் அமைச்சரவை தனது அனுமதியை வழங்கியிருப்பதனால் இதே பிரச்சணை மேலும் அதிகரித்தே தீரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த பகுதியில் இந்த சீனித் தொழிற்சாலையை அமைக்கும் பிரேரணை தனது ஆட்சிகாலத்தில் விவாதிக்கப்பட்டு, அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அது நிராகரிக்கப்பட்டது என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் முன்னர் தெரிவித்திருந்தார்.
அதே போன்று, வடக்கு மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சரான பொன். ஐங்கரநேசனும் இந்த தொழிற்சாலைக்கு தனது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சார்ப்பாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இந்த சீனித் தொழிற்சாலை வவுனியாவில் அமைந்தால் அந்தப் பகுதி நிலமே முற்றாக சீர்கேடு அடைந்து மக்களின் இன்னல்கள் மேலும் பெருகும் என்று அவர் எச்சரித்திருந்தார்.
காடுகளிற்கு அருகில் எந்த தொழிற்சாலையை அமைப்பது ஏற்புடையதல்ல என்று ஐ நாவின் சுற்றுச்சூழல் தீர்மானம் கூறுகிறது. அவ்வாறு அமைக்கப்படும் போது, அது வனஜீவராசிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து மனித-மிருக மோதலை அதிகப்படுத்தி, அந்த விலங்குகளின் எதிர்காலத்தை பாதிப்பதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சங்கிலியை கடுமையாக பாதிக்கும் என்கிறது ஐ நா அறிக்கை.
இலங்கையில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் யானைகள் மனித குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளிற்கு வந்து அங்கு தொடர்ந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாடறியும். மேலும், யானைகள் தமது பகுதிகளிற்கு வந்து விவசாய நிலங்களை பாதிக்காமல் இருப்பதற்காக தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி யானைகளும் கொல்லப்படுகின்றன. சட்டவிரோதமான மின்சார வேலிகளில் சிக்கியும் யானைகள் உயிரிழக்கின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கையில் 300க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசி திணைக்களத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் நிரப்பரப்பிற்கு ஏற்ப ஒப்பீட்டளவில் அதிகமான யானைகளை கொண்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. ஆனால், தொடர்ந்து நாட்டில் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் அவதானிக்கப்படுகிறது.
தற்போது வவுனியாவில் சீனித் தொழிற்சாலை, வனஜீவராசிகள் அமைச்சின் எதிர்ப்பையும் மீறி அமையுமாயின், அது யானைகளின் எண்ணைக்கை மேலும் குறைய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.