சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் சுமந்திரன் சொன்னார்… வெளியுறவுக் கொள்கையைப் பகிரங்கமாக விவாதிக்க முடியாது என்று. வெளியுறவுக் கொள்கை ஒரு ராணுவ ரகசியம் அல்ல. ஆனால் வெளியுறவுச் செயற்பாடுகள் ரகசியமானவைகளாக இருக்கலாம். அவற்றைப் பகிரங்கப்படுத்தி விட்டுத்தான் செய்ய வேண்டும் என்று இல்லை.
அண்மையில் தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுதின.இதில் முதலாவது கடிதத்தை அனுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதத்தை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியது. தமது ராஜதந்திர நடவடிக்கைகளில் வெளிப்படுத்தன்மையை பேணுவதாக அக்கட்சி காட்டிக் கொள்ள விரும்பியிருக்கலாம்.ஆனால் எல்லா ராஜதந்திர நடவடிக்கைகளையும் வெளிப்படையாகச் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்று இல்லை.
கடந்த வாரம் எனது கட்டுரையில் நான் எழுதியது போல ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் அவர் இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு முயற்சித்தார். பொதுவாக இலங்கைத்தீவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் முதலில் உத்தியோகபூர்வமாக செல்வது இந்தியாவுக்குத்தான். கோத்தாபயவும் அதைத்தான் செய்தார். ஆனால் ரணில் பதவியேற்ற உடன் அவ்வாறு இந்தியா செல்வதற்கு அவருக்கு அழைப்பு வரவில்லை. ஆனால் அவருடைய கட்சியில் முன்பு முக்கியஸ்தராக இருந்தவரும், பின்னர் ராஜபக்சர்களோடு இணைந்தவரும், ராஜபக்சக்களால் இந்தியாவுக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டவரும் ஆகிய மிலிந்த மொரகொட தனது நாடு தனக்கு வழங்கிய பணியைக் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஏறக்குறைய ஓராண்டு கால இடைவெளிக்குப் பின் ரணில் இந்தியாவுக்கு செல்கிறார். ஜனாதிபதியாக வந்தபின் அவருடைய முதலாவது இந்திய விஜயம் இது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் இந்தியாவின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக பல காரியங்களை செய்திருக்கிறார்.கடந்த ஓராண்டு காலகட்டத்தில் மிலிந்த இந்தியாவை நெருங்கிச் செல்வதற்காக என்னென்ன செய்தார் என்பது பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை.
ஏன் அதிகம் போவான் ரணிலுடைய இந்திய விஜயத்துக்கு முன்னதாக கொழும்புக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலர் கொழும்பில் என்னென்ன கதைத்தார்? எதை முடிவு செய்தார் ?என்று விவரங்கள் பெரும்பாலானவை வெளியே சொல்லப்படவில்லை. ராஜதந்திர நகர்வுகள் அப்படித்தான் இருக்கும். அவை பகிரங்கமாக விவாதிக்கப்படுகின்றவை அல்ல. இப்படிப்பட்ட ராஜதந்திர சந்திப்புகளில் யாருடன் என்ன பேசப்படும் என்பது வெளியில் தெரிய வருவதில்லை.
முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ –இவரும் பின்னர் பிரதமராக வந்தவர்– தன்னுடைய தகப்பன் பிரதமராக இருந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் எழுதிய ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஒருமுறை அமெரிக்க ராஜதந்திரி பூட்டோவை தனி அறையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.அது பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம்.சந்திப்பு நிகழ்ந்த நேரத்தில் சிறிய பெண்ணாகிய பெனாசீர் பந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.பந்து தவறுதலாக சந்திப்பு நடந்த அறைக்குள் போய்விட்டது. அப் பந்தை எடுப்பதற்கு அறைக்குள் போன பெனாசீர் அங்கே அமெரிக்க ராஜதந்திரி தன் தகப்பனை கடுமையான, அச்சுறுத்தலான துணியில் வற்புறுத்துவதை கண்டிருக்கிறார். நாட்டின் தலைவரான தனது தகப்பனோடு ஒரு வெளிநாட்டுத் தூதுவர் அவ்வாறு அச்சுறுத்தலான தொனியில் உரையாடியமை சிறிய பெனாஸ் இருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. சந்திப்பு முடிந்ததும் அவர் தந்தையிடம் அது பற்றி விசாரித்திருக்கிறார். இந்த ராஜதந்திரிகள் வெளியரங்கில் நாகரிகமாக சிரித்தபடி காணப்படுவார்கள். ஆனால் உட்சந்திப்புகளில் சில சமயம் மிகக் கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று பூட்டோ சொன்னாராம்.உட் சந்திப்புகளில் என்ன நடக்கின்றது என்பது வெளியில் தெரிய வருவதில்லை. ஊடகங்கள் ஊகிப்பவை சில சமயம் சரியாக இருக்கலாம்.
எனவே ராஜதந்திர நகர்வுகள் எல்லாருக்கும் தெரியக்கூடியதாக நடப்பவை அல்ல. எல்லாருக்கும் விளங்கக்கூடியதாகவும் நடப்பவை அல்ல. கடந்த ஓராண்டு காலமாக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை நெருங்கி செல்ல முயற்சித்தார். அதற்காக டெல்லியில் மிலிந்த மொரகொட கடுமையாக வீட்டு வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. எப்படிப்பட்ட வீட்டு வேலைகளைச செய்திருப்பார் என்பது வெளியில் பெரும்பாலும் தெரியாது. ஆனால் ரணிலின் இந்திய விஜயத்தின் பின்னணியில் மிலிந்தவின் கடும் உழைப்பு உண்டு
ஓர் அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்களின் தலைவர்கள் அவ்வாறு கட்டமைப்புசார் உறவுகளுக்கு ஊடாக நாடுகளைக் கையாள முடிகிறது. ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் என்ன செய்கிறார்கள்?
தமிழ் கட்சிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது சரி. ஆனால் வெளிவிவகாரம் எனப்படுவது கடிதங்களை விடவும் ஆழமானது.எழுதிய கடிதங்களை பத்திரிகைகளில் பகிரங்கமாக வெளியிடுவது என்பது ஒரு வெளிப்படை தன்மையைக் காட்டும். அதன்மூலம் தமது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த குறிப்பிட்ட கட்சி விரும்பக் கூடும். ஆனால் எல்லா விடயங்களையும் அவ்வாறு வெளிப்படுத்த முடியாது. சில வெளியுறவு நகர்வுகள் வரலாற்றில் பல தசாப்தங்களின் பின்னர்தான் தெரிய வருகின்றன. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிகழ்த்த பல அவ்வாறான நகர்வுகள் யாருக்குமே தெரியாமல் காலத்தின் மர்ம அடுக்குகளுக்குள் புதைந்து போய்விட்டன.
எனவே கடிதம் எழுதுவது சரி.ஆனால் கடிதத்துக்கும் அப்பால் உழைக்க வேண்டியிருக்கிறது. கடிதத்தை எழுதினோம் பத்திரிகைகளில் வெளிப்படுத்தினோம் என்பதோடு வெளியுறவு நடவடிக்கைகளை சுருக்கிக் கொள்ளமுடியாது. தம்மை ஒரு தேசமாகக் கருதும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து கடிதம் எழுதும் கட்சிகள், ஒரு தேசத்துக்குரிய ஒழுக்கத்தோடு வெளியுறவுச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஒரு கட்டமைப்பு வேண்டும். கட்டமைப்பு சார்ந்த சிந்தனையும் செயற்பாடும் வேண்டும்.இது இந்தியாவின் விடயத்தில் மட்டுமல்ல, சீனா,அமெரிக்கா, ஐநா உள்ளிட்ட எல்லா வெளித்தரப்புகளை கையாளும் போதும் பொருந்தக்கூடியதே
இந்தியாவின் விடயத்தில் மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் பேரவையின் விடயத்திலும் தமிழ் கட்சிகளின் கடிதம் விடு தூது ராஜ தந்திரத்தின் இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்டலாம். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கடிதத்தை அனுப்பின. அதில் முக்கியமாக இரண்டு விடயங்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒன்று பொறுப்புகூறலை சர்வதேச நீதிமன்றங்களுக்கு பாரபடுத்த வேண்டும் என்பது.இரண்டாவது சான்றுகளையும் சாட்சிகளையும் திரட்டுவதற்கு ஒரு பலமான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பது.
இது தொடர்பாக கடிதம் எழுதிய மூன்று கட்சிகளும் அதன் பின் தமது கோரிக்கைகளை நோக்கி எந்தளவுக்கு உழைத்திருக்கின்றன? கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலப் பகுதிக்குள் தமிழ் கட்சிகள் அது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன?அதில் ரகசியமான நகர்வுகள் இருக்கக்கூடும்.அதை அவர்கள் வெளிப்படுத்தத் தேவையில்லை.அந்த கடிதத்தில் கேட்கப்பட்ட ஒரு விடயத்தை அதன் பலவீனமான வடிவத்தில் ஐநா நிறைவேற்றியிருக்கிறது. சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் கட்சிகள் கேட்டது விவகாரத்தை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகுமாறு.ஆனால் மேற்படி அலுவலகமானது மனிதஉரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துக்கு உட்பட்டதுதான். அதாவது விவகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கை அரைகுறையாகத்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆயின், தமிழ் கட்சிகள் உழைத்தது காணாது என்று பொருள். அல்லது தமிழ் கட்சிகளின் லொபி எடுபடவில்லை என்று பொருள். அப்படித்தான் பொறுப்புக்கூ றலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகும் விவகாரமும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் அதற்காக எவ்வளவு தூரம் உழைத்திருக்கின்றன? அவர்கள் செய்த ரகசிய நடவடிக்கைகளை வெளிப்படுத்தத் தேவையில்லை. ஆனால் அதற்காக எப்படிப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையாவது வெளியே செல்ல வேண்டும். ஏனென்றால் கட்டமைப்புகள் இல்லாமல் ருவிற்றரில் கட்சிகளின் ஆதரவாளர்கள் போடும் குறிப்புகளை வைத்து ராஜதந்திர நகர்வுகளை மதிப்பிட முடியாது. ஏனென்றால் தமிழ் கட்சிகளின் ஆதரவாளர்கள் ருவிற்றரில் ஆங்கிலத்தில் போடும் குறிப்புகளைப் பார்த்தால் அவர்கள் யாரிடமும் எந்த ஒரு வெளியுறவு ஒழுக்கமும் இல்லை என்று தெரிகிறது. அவர்கள் எல்லாரும் பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, ருவிற்றரில் வீரம் காட்டுகிறார்கள், அல்லது வெறுப்பைக் கொட்டுகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே கடிதம் எழுத வேண்டும்.அதைவிட ஆழமான பொருளில் தமது இறுதி இலக்கு என்று எதனை கட்சிகள் கூறுகின்றனவோ, அதை நோக்கிக் உழைக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அப்படிப் போராடத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.போராட்டம் தான் போராட்டத்தை வளர்க்கும். ஆனால் அந்தப் போராட்டம் ரணில் விக்ரமசிங்க திட்டமிடுவது போல, தமிழ் மக்களின் கூட்டுக் கவனத்தை சிறிய சிறிய உடனடி நிகழ்வுகளின் மீது சிதறடிக்கும் தந்திரத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ பதில் வினையாற்றும் ஒரு போராட்டமாக இருக்கக் கூடாது.