கனடா வாழ் செந்தில் குமரனின் நிறுவனத்தால் வழங்கப்பெற்ற நிதியால் சென்ற வருட இறுதியில் “கனடா மல்லாவி” இரத்த சுத்திகரிப்பு நிலையம், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாஞ்சோலை மருத்துவமனையில் ” ரொறன்ரோ முல்லை” இரத்த சுத்திகரிப்பு நிலையம் ஆகிய மருத்துவ நலத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பெற்ற தொடர்ச்சியில் அண்மையில் மாஞ்சோலை மருத்துவமனைக்கு மேலுமொரு வரப்பிரசாதமாக “மார்க்கம் முல்லை” இதய நோய் சிகிச்சை பிரிவானது கனடாவின் இலங்கைக்கான தூதுவரான திரு எரிக் வால்ஷ் நினைவு கல்லினை திறந்து வைத்தார். யாழ் போதனா வைத்தியசாலையின் மூத்த இதயசிகிச்சை நிபுணரான வைத்தியர் லக்ஷ்மன் நாடாவை வெட்டி நிலையத்தினை திறந்து வைத்தார். பல மூத்த வைத்திய நிபுணர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இந்த நெகிழ்ச்சி தரும் நிகழ்வினை சிறப்பித்தனர்.
கடந்த காலங்களில் இந்த சிகிச்சை பிரிவு இல்லாமல் பல உயிர்களை முல்லைதீவு மாவட்டம் இழந்திருக்கிறது. இலங்கையில் வாழும் வறிய தமிழ் மக்களுக்கு தனது நிவாரண அமைப்பின் ஊடாக கனடாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி சேகரித்து பல நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் பாடகர் செந்தில் குமரன் அவர்களுக்கு கனடா தமிழர்களிடையே பெரும் ஆதரவு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட திட்டங்களை விட அவர் தமிழீழம் முழுவதிலும் மருத்துவர்களுடான நட்பினை ஏற்படுத்தி மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நூற்றிற்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து அவர்களுக்கு மீள்வாழ்வு அளித்தவராவார். கிளிநொச்சியில் நடமாடும் மருத்துவ சேவையினை கடந்த பல வருடங்களுக்கு முன் ஸ்தாபித்து படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று வைத்தியம் வழங்கும் சேவையினை தொடர்ச்சியாக வழங்கி கொண்டிருப்பது, இதனால் பயனுறும் நோயாளிகளுக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் பெரும் ஆறுதலனை தருகிறது. இது மட்டுமல்லாமல் பல கோடிகள் பெறுமதியான வாழ்வாதாரங்கள் இவரின் நிறுவனத்தால் சிறுநீரக நோயாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றது. மொத்தத்தில் கடந்த எட்டு மாதத்தில் ரூபாய் 18,382,080 நிதியுதவி முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பினரால் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
–