வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2016 ம் ஆண்டு இரு நாட்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமுல்ப்படுத்த வேண்டும். இலங்கை ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ள நிலையில் மீனவர் பிரச்சினை தொடர்பிலும் இழவை மடிப் படகுகள் தொடர்பிலும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவுடன் பேசவேண்டுமென சில கட்சிசார் அமைப்புக்கள் கூறி வருகின்றன. தொப்புள் கொடி உறவுகளுக்கிடையிலான பிர்சினையை அரசியலாக்கி கட்சிசார் அமைப்புக்கள் வெளியிடும் கருத்துக்களை மீனவர்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ளவியலாது.
இன்றைய ஜனாதிபதி முன்னர் பிரதமராக இருந்த போது, 2016 ம் ஆண்டு நவம்பர் 5 ம் திகதி வெளிவிவகார அரச மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இதுவரை அந்த அறிக்கையை ஜனாதிபதியோ உரிய அமைச்சரோ நடைமுறைப்படுத்தவில்லை. இதேபோல் தான் தற்போதும் இந்தியாவிற்கு சென்று அறிக்கையொன்று எட்டப்பட்டு நடைமுறைப்படுத்தாத நிலையே ஏற்படவுள்ளது.
ஏற்கனவே டில்லியில் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை நடைமுறைப்படுத்தினாலே போதுமானது. குறித்த அறிக்கையானது இந்தியாவின் இணையத்தளத்திலும் உள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதம் 28 ம் திகதி 7 சமாசங்களும் 18 சங்கங்களும் கலந்துரையாடி இவ் அறிக்கையை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். குறித்த அறிக்கையில் 6 மாதங்களுக்கொரு தடவை மீனவ அமைப்புக்கள், கடலோர காவற்துறை மற்றும் இரு நாட்டு அரசாங்கங்களும் கலந்துரையாட வேண்டும் என நல்ல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டுமனக் கூறப்பட்டது. இந்திய மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் பலாலி விமான நிலையமூடாக வந்திறங்கி யாழ். கலாசார நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர். அதன்போது இந்திய மீனவர்களை இடியுங்கள், பிடியுங்கள் என கூறி மயிலிட்டி துறைமுகத்தில் கடற்தொழில் சமாசங்களுக்கு இந்தியாப் படகுகள் வழங்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சருடனும் மாநிலத் தலைவருடன் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் பேச அழைத்திருக்கவில்லை.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை இன்றைய சூழலில் அரசியல் கட்சி சார்ந்தவர்களின் பிரச்சினையாகவே மாற்றப்படுகின்றது. தற்போதும் கடலட்டைப் பண்ணைகள் பினாமிகளின் பெயரிலே உள்ள நிலையில் அரியாலையிலுள்ள கம்பனி சீனா முதலீடாகவிருப்பினும் தற்பொழுது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பருத்தித்தீவில் உள்ள காவற் கொட்டகைகளில் சீனா நாட்டவர்கள் தங்கியிருந்ததை உறுதிப்படுத்தி யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் ஆங்கிலப் பத்திரிகைளிலும் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
எமது கடலில் நாம் சுதந்திரமாகத் தொழில் மேற்கொள்ள வேண்டும். எனவே வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும். இதேவேளை 2016 ம் ஆண்டு உடன்படிக்கை மாற்றப்படின் வடக்கு கடலை சீனாவிற்கு ஒப்படைக்கும் சூழ்ச்சியாக அமையும். இப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான் 2017 ம் ஆண்டு 11 ம் இலக்க கடற்தொழில் உள்ளூர் இழுவைமடிச் சட்டமும், 2018 ம் ஆண்டு வெளிநாட்டு மீனவர் ஒழுங்குபடுத்தல் சட்டமும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை வட மாகாண கூட்டுறவு ஆணையாளர் சங்கங்கள் சமாசங்களின் பதவி நியமனங்களுக்காக கட்சியின் ஆதரவாளர்களே நியமிக்கப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடு கூட்டுறவையும் வடக்கு கடலையும் அழிப்பதற்கு துணைபோவதாக அமைகின்றது.
ஜனநாயக முறையில் கூட்டுறவு முறைகள் இடம்பெற இடமளிக்காவிட்டால் பதவிகளை வழங்கிவிட்டு சுதந்திரமாகச் சம்பளத்தைப் பெறலாம். இதைவிட அரசு காணியை அளவிடுகிறது என போராடுவோர் கடல் பிரதேசங்களை சட்டவிரோதமாக கடலட்டை பண்ணைகளுக்கு வழங்குவதையும் அவதானிக்க வேண்டும். இது தொடர்பில் சட்டம் தெரிந்த சட்டவல்லுனர்கள் முன்வந்து வழக்குத் தொடுக்க வேண்டும்.
நிலம் மட்டுமல்ல கடலும் எமது உரிமை. மீனவர் பிரச்சினை அனைத்து மீனவர் அமைப்புக்களுடனும் இணைந்து கலந்துரையாடி தீர்வுகளை எட்ட வேண்டுமே தவிர கட்சி சார்ந்தோரை முன்னிறுத்தி டில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை மீனவர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கான குரலாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே வடக்கு மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவுக்கு இந்திய பிரதமர் மோடி அழுத்தங்களை வழங்குவதோடு சீனாவின் பிடியில் சிக்கியுள்ள வடக்கு கடலை மீட்பதற்கான அழுத்தங்களை இந்திய பிரதமர் மோடியை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார் .