(21-07-2023)
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிரபாகரனிடம் ”உங்களுக்கு நாங்கள் ஒரு சுயாட்சியை உருவாக்கித் தருவோம் ” என்று உத்தரவாதம் வழங்கினார்.
அந்த உத்தரவாதம் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
ஆகவே அந்த உத்தரவாதத்தை நிறைவேற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென வேண்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் வீழ்ச்சிக்கு சிங்கள தமிழ் இனங்களுக்கிடையிலான முரண்பாடு பிரதான காரணம். தமிழர்கள் உரிமை கேட்கின்றபோது சிங்கள மக்களின் இருப்பு இல்லாமல் போய்விடும் என்று சிங்கள மக்களுக்கு அப்பட்டமான பொய்களை சிங்கள அரசியல் தலைவர்கள் சொல்லி சொல்லியே முறைகேடான ஆட்சியை கொண்டு நடத்துவதில் பழக்கப்பட்டு விட்டனர். இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் முதலில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் உயரிய சபை ஊடாக இந்திய அரசிடம் ஒரு கோரிக்கையை விடுக்க விரும்புகின்றேன். 1987 ஆம் ஆண்டு வடமராட்சி மீது இராணுவம் ஒரு பாரிய இன அழிப்பு யுத்தத்தினை மேற்கொண்டது. அந்த யுத்தத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடினார்கள்.
அந்த யுத்தத்தில் நெல்லியடியில் மில்லர் நடத்திய தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாது இராணுவம் திணறிய நிலையில் அப்போதைய ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தன ஓடிப்போய் இந்தியாவின் காலடியில் விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் இலங்கை -இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அடிப்படையில்தான் இலங்கை -இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதாக கூறப்பட்டது. இதன்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிரபாகரனிடம் ” ஒரு சுயாட்சியை உருவாக்கித்தருவோம் ” என்ற உத்தரவாதத்தை கொடுத்திருந்தார்.
அந்த அடிப்படையில் தான் ஆயுதங்கள் இந்தியாவிடம் கையளிக்கப்ட்டன. அந்த உத்தரவாதம் இன்றுவரை இந்தியாவினால் நிறைவேற்றப்படவில்லை.
எனவேதான் இன்று இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த இடத்திலிருந்து நாம் இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் வேண்டிக்கொள்ளும் விடயம் என்னவென்றால் இலங்கையில் தமிழ் தேசம் இறைமை அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கான அழுத்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா கொடுக்க வேண்டும்.
இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது வழங்கப்படவில்லை. 13 ஆவது திருத்த சட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதுமே ஏற்கத் தயாரில்லை. எனவே தமிழ் தேசம்,இறைமை,சுய நிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும்.இந்த தீர்வை எட்டுவதற்கு இந்தியா முழுமையாக தலையிட வேண்டும் என இந்திய பிரதமரிடம் வேண்டுகின்றோம் என்றார்.