நடராசா லோகதயாளன்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (28) நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதை பிற்போடுமாறு இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை மாவட்ட அரச அதிபர் நிராகரித்துவிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் அதிகதி மிகுந்த ரத்தக்களறியுடன் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட கொடூர யுத்தத்தின் இறுதிப்பகுதி மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதாக அவர்களின் உறவுகள் கூறி வருகின்றனர்.
அவர்களை கண்டறிவதற்காக அரசால் அமைக்கப்பட்ட காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் இன்றுவரை ஒருவரைக்கூட கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 14 ஆண்டுகளாக தமது உறவுகளை தேடி அலையும் குடும்ப உறுப்பினர்களின் அமைப்பு வெள்ளிக்கிழமை (28) வடக்கு கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த அழைப்பிற்கு தமிழர் தாயகப் பகுதியில் பரந்துபட்ட ஆதரவு வெளியாகியுள்ளது. அதை கருத்தில்கொண்டு இன்றைய ஒருங்கிணைப்புக் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
காணாமல்போன உறவுகளின் முழு அடைப்பிற்கு ஆதரவாக ஒருங்கிணைப்பு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் விடுத்த கோரிக்கையை மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நிராகரித்துள்ளார்.
அரச அதிபருக்கு இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுதியுள்ள கடிதத்தில் “அன்றைய தினம் ‘கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதிகோரியும், சர்வதேசக் கண்காணிப்பை வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்’ நடைபெறாவுள்ள நிலையில் கொள்கை ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கும் நாங்கள், அதற்கு முரணாக குறித்த தினத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை, இந்த மாவட்டத்தின் பெரும்பான்மை மக்களின் ஆதரவுத்தளத்தோடு நடாத்தப்படவுள்ள முழு அடைப்புப் போராட்ட நாளில் நட்டாத்துவது அந்த மக்களின் மன உணர்வுகளை எதிர்மனோநிலையோடு அணுகுவதாகும் அமையும் என்று சிறீதரன் மற்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோரும் கடிதம் 2023-07-26 அன்று மாவட்ட அரச அதிபரிற்கு அன்வுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபரும் ஒருங்கிணைப்புக் கெழுவின் செயலாளருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது:
“கோரிக்கை கடிதம் கிடைத்துள்ளது. இருந்தபோதும் இது தொடர்பில் இணைத் தலைவர்களுடனும் பேசியே” முடிவை எட்ட முடியும் இருந்தபோதும் இனி இறுதி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும் சூழல் காணப்படவில்லை என்றார்.
இதேநேரம் தமது கோரிக்கை நிராகரிக்கப்படுமானால் வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.