(28-07-2023)
இலங்கையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் தமிழ் நாடகம் நடத்தப்படுவதை தடுக்க தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 09 ஆம் திகதி மாலை, பொகவந்தலாவ, கொட்டியாகல தோட்டத்தில் அரங்கேற்றப்படவிருந்த லயத்து கோழிகள் நாடகத்தை தடுக்க இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இணைந்து செயற்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜூலை 26 ஆம் திகதி முறைப்பாடு செய்த, நாடகத்தின் நெறியாளர், எதிர்காலத்தில் இவ்வாறான கலைச் செயற்பாட்டு முயற்சிகளின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.
“இன்று நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளோம். நாடகக் கலைஞன் என்ற வகையில் நீண்டகாலமாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். அப்படி இருக்கையில் இராணுவம் எந்த அடிப்படையில் இதில் தலையீடு செய்கிறது? எதிர்காலத்தில் இவ்வாறான முயற்சிகளின் போது எமது பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது?” என தோட்டத்தைச் சேர்ந்தவரும், நாடகத்துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்டவருமான கலைஞர் இராசையா லோகநந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையகத்தின் அனுபவம் வாய்ந்த நாடக கலைஞர் இராசையா லோகநந்தனின் நெறியாள்கையில் ‘லயத்து கோழிகள்’ நாடகம் தொடர்பில் இராணுவம் விசாரணைகளை மேற்கொண்டதை ஒப்புக்கொண்ட கொட்டியாகலை தோட்ட நிர்வாகம், இராணுவத்திற்கு தகவல்களை வழங்கியதாகவும் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.