பு.கஜிந்தன்
13ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சி வழங்கும் – பிரதித்தலைவர் அங்கஜன் எம்.பி
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்படுகின்ற 13 வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான ஒத்துழைப்பை பாராளுமன்றத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தம் தொடர்பான விவாதம் ஒன்றை பாராளுமன்றத்தில் நடத்த உள்ளமை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியை பொறுத்த வரை அன்றிலிருந்து இன்று வரை சாதகமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம் பெற்ற சர்வகட்சி மாநாட்டில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் கலந்து கொண்டோம்.
எமது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமிடம் பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எமது கட்சி வெளிப்படைத் தன்மையுடன் கருத்துக்களை முன்வைத்ததுடன் கட்சியின் விருப்பத்தையும் தெரிவித்தார்.
ஆனால் 13 வது திருத்தத்தில் என்னென்ன விடயங்களைப் பற்றி பேசப் போகிறோம் அல்லது நடைமுறைப்படுத்தவுள்ளோம் என தெளிவான விளக்கத்தை சமர்ப்பி யுங்கள் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
30 வருட யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு 13 வது திருத்தம் முழுமையான தீர்வை முன்வைக்காத நிலையில் ஆரம்ப புள்ளியாக முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.
ஏனெனில் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பயனாக அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13 வது திருத்தம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரியவரும் நிலையில் எமது கட்சியின் தலைவர் முன்னர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் எமது செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.