அண்மையில் இந்திய இலங்கை தலைவர்களுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின்போது இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான ராமர் பாலத்தை புதிதாகக் கட்டுவதற்கான முன்மொழிவை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக சிங்கள பௌத்த தீவிரவாதிகள் ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.தயான் ஜெயதிலக்க ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ரணில் இலங்கையை இந்தியாவிடம் விற்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்.தயான் காலத்துக்கு காலம் விசுவாசத்தை இடம் மாற்றிக்கொள்பவர்.
ரணில் விக்கிரமசிங்க அந்த யோசனையை இப்பொழுதுதான் முன்வைக்கிறார் என்பதல்ல. 2014 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த காலத்திலும் அவர் அந்த யோசனையை முன்வைத்தார். முன்பு பிரதமராக இருக்கும் பொழுது வைத்த அதே யோசனையை இப்பொழுது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக இருக்கும்போது முன்வைக்கின்றார். முன்பு பிரதமராக இருந்த பொழுது அவருடைய ஆட்சியை இரட்டை ஆட்சி என்று அழைத்தார்கள். அப்பொழுது சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தார். அரசாங்கம் என்ற வண்டிலை இரண்டு மாடுகளும் இரு வேறு திசைகளுக்கு இழுத்தன. முடிவில் ரணில் விக்கிரமசிங்க, தான் நினைத்த எதையும் செய்ய முடியவில்லை. இப்பொழுதும் அவர் மக்கள் ஆணை இல்லாத ஓர் அரசுத் தலைவர். தனது முன்னாள் அரசியல் எதிரிகளான ராஜபக்சங்களின் தயவில் தங்கியிஇருப்பவர். எனவே இப்பொழுதும் அவர் பாலம் கட்டும் அளவுக்கு பலமான ஒரு தலைவர் அல்ல. ஆனாலும் அவர் அரசுத் தலைவர். இரண்டு தடவைகள் இந்தியாவுக்கு அவர் அந்த ஐடியாவைக் கொடுத்துவிட்டார். எனவே இந்தியாவைப் பொறுத்தவரை அது ஒரு வாய்ப்பு. அவருக்கு மக்களாணை இருக்கிறதோ இல்லையோ ஒரு நாட்டின் தலைவர் கொடுத்த வாக்குறுதி அது என்ற அடிப்படையில் இந்தியா அதை பற்றிப் பிடித்துக் கொள்ள முடியும்.
2004 ஆம் ஆண்டு ரணில் இந்த வாக்குறுதியை வழங்கிய பின் மீண்டும் அவர் 2015 ஆம் ஆண்டு மைத்திரியோடு இணைந்து ஆட்சிக்கு வந்த பொழுது, இந்தியா பாலம் கட்டும் யோசனையை முன்வைத்தது. அப்பொழுது இந்திய அமைச்சராக இருந்த நிதின் கட்டாரி அந்த வேண்டுகோளை விடுத்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க அப்பொழுதும் பலவீனமான ஒரு பிரதமராக இருந்தார் .நிறைவேற்று அதிகாரம் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தது. எனவே நிதின் கட்டாரியின் வேண்டுகோளுக்கு அவர் பதில் சொல்லவில்லை.
இப்பொழுது ரணில் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி. ஒப்பீட்டளவில் முன்னய இரண்டு ஆட்சிக்காலங்களையும் விட அவர் பலம். ஆனால் மக்கள் ஆணை இல்லை.அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதுவரை ராஜபக்சங்களில் தங்கியிருக்க வேண்டும். எனவே இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவை சமாளிக்கவும் இந்தியாவை தன்பக்கம் வென்றெடுக்கவும் அவர் தன்னுடைய முன்மொழிவை 19 ஆண்டுகளின் பின் மீண்டும் புதுப்பித்து இருக்கிறார். குறிப்பாக கடந்த ஆண்டு முழுவதும் இலங்கை இந்தியாவிடம் கடன் பட்டிருக்கும் ஒரு பின்னணியில், இலங்கை இந்தியாவை நிராகரிக்க முடியாத ஒரு பின்னணியில், அவர் அந்த வேண்டுகோளை முன்வைக்கின்றார்.
அப்படி ஒரு பாலம் கட்டப்பட்டால் தூத்துக்குடியில் இருந்து மன்னாருக்கும் பின்னர் மன்னாரில் இருந்து திருகோணமலைக்கும், கொழும்புக்கும் புகையிரதப் பாதைகள் அமைக்கப்படும் என்றும் நம்பலாம். ரணில் மோடி சந்திப்பின்போது திருகோணமலையை பிராந்தியத்தின் பொருளாதார அச்சாக மாற்றலாம் என்று உரையாடப்பட்டுள்ளது.
ஆனால் அதன்மூலம் இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டு விடும் என்ற அச்சத்தை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் தூண்டி விடுவது இலகுவானது. அதன் பின் பொருளாதாரம் உட்பட எல்லா விடயங்களிலும் இலங்கை அதன் சுயாதீனத்தை இழந்து விடும் என்ற அச்சத்தையும் தூண்டி விடலாம்.பாலத்தைக் கட்டினால் இச்சிறிய தீவு இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாகிவிடும் என்ற அச்சத்தை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் தூண்டி விடுவது இலகுவானது. குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஒரு புதிய பலம் கிடைத்துவிடும் என்றும் அவர்கள் அஞ்சுவார்கள். சிங்கள மக்களின் இந்த அச்சத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ரணிலுக்கு எதிராக பெரிய போராட்டங்களை ஒழுங்குபடுத்தும்.பிக்குகளையும் தெருக்களில் இறக்கும். அவற்றையெல்லாம் மீறி ரணில் பாலத்தை கட்ட முடியாது.
ஆனால் ஒரு தலைவராக அவர் அந்த ஐடியாவை கொடுத்து விட்டார்.அந்த ஐடியா எத்தகையது என்பதற்கு ஒரு கிராமிய உதாரணத்தை இங்கே சுட்டிக் காட்டலாம்.நாய்களுக்கு இடையே சண்டை வரும் பொழுது தோற்றுப் போன நாய் என்ன செய்யும் தெரியுமா? நான்கு கால்களையும் வானத்தை நோக்கி உயர்த்தியபடி தன் வயிற்றுப்பகுதியைக் காட்டியபடி மல்லாக்கக் கிடக்கும். அது ஒரு முழுச்சரணடைவு.நாயின் உறுப்புகளில் மிகப் பலவீனமானது அடி வயிற்றுப் பகுதி.அந்த மென்மையான அடிவயிற்று பகுதியை எதிரியிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டு நான் மோதலுக்கு தயார் இல்லை; எனது பலவீனத்தை நீ தாக்கலாம் என்று சரணடைவது ஏறக்குறைய அதே தற்காப்பு உத்தியை ரணில் நினைவுபடுத்துகிறார். சீன விரிவாக்கத்தில் ஒரு பகுதியாக மாறி இருக்கும் இச்சிறிய தீவை உங்களோடு கொண்டு வந்து இணைக்கிறோம் உங்களுடைய பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் எல்லாவற்றையும் போக்க நாங்கள் தயார் என்ற ஒரு செய்தியை அவர் மோடிக்கு வழங்குகிறார்.
அவர் மட்டுமல்ல எந்த ஒரு சிங்களத் தலைவரும் அந்த பாலத்தை கட்டத் துணிய மாட்டார்கள் என்பது இந்தியாவுக்கும் தெரியும்.ஆனால் இந்தியாவை பொறுத்தவரையிலும் அது ஒரு பிடி.ஏற்கனவே பலாலிக்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான விமான போக்குவரத்து முழுமையாக தரம் உயர்த்தப்படவில்லை. தமிழகத்திற்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவே இல்லை. யாழ்ப்பாணத்தில் இந்தியா கட்டிக் கொடுத்த கலாச்சார மண்டபத்தை முழுமையாக இயக்க முடியவில்லை.சீனாவிடம் இருந்து இந்தியா தன் வசப்படுத்திய தீவுப் பகுதிகளுக்கான மீள புதுப்பிக்கும் எரிசக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இவ்வாறாக கடந்த 14 ஆண்டுகளில் இந்தியா தமிழ் பகுதிகளோடு தன்னை பிணைத்துக் கொள்ளும் வகையில் முன்வைத்த பிணைப்புத் திட்டங்கள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் நிலத் தொடர்ச்சியைப் பேணும் வகையில் ஒரு பாலத்தைக் கட்டுவது என்ற முன்மொழிவு எத்துணை கடினமானது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். ரணில் விக்கிரமசிங்க தற்காப்பு நிலையில் நிற்பது போல நடித்து இந்தியாவை சமாளிக்க முயற்சிக்கின்றார்.
அவர் அவ்வாறு வாக்குறுதியளித்த சில நாட்களின் பின் கடந்த 27 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் வைத்து இந்திய உத்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த ஒரு கருத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். “காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில்தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது, தமிழக மீனவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்…” என்று அமித் ஷா கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலை ஒரு நடை பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அதைத் தொடக்கி வைத்து ராமேஸ்வரத்தில் உரையாற்றும் பொழுதே இந்திய உள்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அதில் பயன்படுத்திய வார்த்தைக்கு ஆங்கிலத்தில் முதல் அர்த்தம் பெரிய அளவிலான மனிதப் படுகொலை என்பதாகும். எனினும் அதை இனப்படுகொலை என்றும் வியாக்கியானம் செய்யலாம் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். அமைச்சர் அமித் ஷாவின் உத்தியோகபூர்வ ருவிற்றர் தளத்தில் தமிழில் இனப்படுகொலை என்றே உள்ளது. அமித்ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சர். இந்தியப் பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள அமைச்சுப் பதவி அது. தமது உள்நாட்டுக் கட்சித் தேவைகளுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டைப் பலவீனப்படுத்துவதற்காக அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். தமிழகத்தின் ஈழ ஆதரவு வாக்குகளை ஹைஜாக் பண்ணும் நோக்கம் அதில் இருக்கலாம்.
ஆனால் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக வெளியுகறவுகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களை பேசும் பொழுது, அதுவும் ஒரு உள்துறை அமைச்சர் பேசும்போது அதற்குரிய அரசியல் பரிமாணத்தை உணர்ந்து பேச முடியும். அமித்ஷா பெரும் மனிதப் படுகொலை அல்லது இனப்படுகொலை என்ற அர்த்தத்தில் ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அப்படியென்றால் அது இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா? அல்லது தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தையா? அதுவும் ரணில் விக்கிரமசிங்க ராமர் பாலத்தை கட்டலாம் என்று சம்மதம் தெரிவித்த பின் பாரதிய ஜனதாவின் பெரும் பிரதானிகளில் ஒருவர் அவ்வாறு கூறுவதன் மூலம் அதையும் ராமேஸ்வரத்தில் வைத்து கூறுவதன் மூலம் இலங்கைக்கு இந்தியா எதையாவது உணர்த்த முற்படுகின்றதா?
இந்த வாரம் தொடக்கம் சீன நிறுவனம் ஒன்று இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தில் குதிக்கின்றது. ஏற்கனவே உள்நாட்டு சந்தையில் இந்திய நிறுவனம் இறங்கிவிட்டன. திருகோணமலையில் உள்ளஎண்ணெய்க் குதங்களை இந்தியா உபயோகப்படுத்துவதற்கு கொடுத்தது ரானில்தான். தன்னுடைய முன்னைய ஆட்சி காலம் ஒன்றின் போது அவர் அவற்றைக் கொடுத்தார். இப்பொழுது உள்ளூர் எரிபொருள் விநியோகத்தில் “சினோபெக்” நிறுவனம் 150 எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்கப் போவதாக கூறப்படுகிறது. தனது கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடம் காரணமாக எல்லாப் பேரரசுகளுக்கும் இடையில் இலங்கை சுழித்துக் கொண்டு ஓடுகிறது. இவ்வாறு சுழித்துக் கொண்டு ஓடக்கூடிய தலைவர்களில் அதிகம் தேர்ச்சியானவராக, முதிர்ச்சியானவராக, தந்திரங்கள் மிகுந்தவராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார். அந்த முதிர்ச்சி, தேர்ச்சி, தந்திரம் காரணமாகத்தான் அவர் தரைப்பாலம் என்ற தூண்டிலை இந்தியாவை நோக்கி வீசுகிறார். அவர் அவ்வாறு ஒரு தூண்டிலை போட்ட பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் அமித்ஷா ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறுவது எதை காட்டுகின்றது?அந்த வார்த்தை பிரயோகத்துக்குள் பொதிந்திருக்கும் ராஜதந்திர பரிபாசை எது ?