புறமொதுக்கப்படும் மலையகத்தின் விடிவுக்கான நடைவேள்வி, வவுனியாவிலிருந்து புறப்படுகிறது! தென் தமிழகத்திலிருந்து மலையக உறவுகள் இலங்கை தேசத்திற்கு கொண்டுவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துவிட்டுள்ளது.
ஆனபோதிலும், இந்த மக்கள் தொன்றுதொட்டு ஆட்சிபீடமேறிவருகின்ற அரசுகளால் இன்றுவரை புறக்கணிக்கப்பட்ட மக்கள் கூட்டமாக ‘மாற்றான் தாய்’ மனப்பாங்குடன் நடத்தப்பட்டு வருகிறார்கள்.
நாகரீக சமூகங்கள் வாழ்கின்ற காலத்தில் வெட்கப்படவேண்டிய இந்தப் பேரவல உண்மையை பொதுவெளிக்கு பறைசாற்ற வேண்டியது மனித சமூகத்தின் புறமொதுக்கமுடியாத கடமையாகக் காணப்படுகிறது.
அந்தவகையில், ‘வேர்களை மீட்டு உரிமைகளை வெண்றிடுவோம்!’ என்கின்ற தொணிப்பொருளை வெளிப்படுத்தியவாறு, அன்றுகளில் மலையக உறவுகள் கால்நடையாக கொண்டுவரப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளை வரையான பயணப்பாதை வழியே ஒரு நீண்ட நெடும் பாதயாத்திரை கடந்த 29 ஆம் திகதி வெகுமக்கள் வலுக்கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் பேராதரவு கிடைத்துவருகின்றது.
அதற்கொப்ப, 7 ஆம் நாளான இன்று (04.08.2023) அதிகாலை வவவுனியா நகரிலிருந்து ஓய்வுதுறந்து புறப்பட்டுள்ள கால்நடைவேள்விப் பயணம், சர்வமத ஆசீர்வாதங்களுடன் சமூகம்சார் பொது அமைப்புகள், குரலற்ற மனிதர்களுக்காக குரலுயர்த்துகின்ற மனிதநேயத் தரப்புகள், குடிமக்கள் எனப் பலதரப்பினர்களினதும் ஏகோபித்த ஒத்திசைவுடன் தொடங்கி இடம்பெற்று வருகின்றது.
இந்த நடைபவணியானது, சுமார் 26 கிலோமீற்றர் தூரம் பயணித்து இன்று மாலை மதவாச்சியை சென்றடையவுள்ளது.