பு.கஜிந்தன்
பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அரச மரமானது சங்கமித்தையால் நாட்டப்பட்டதாக கூறி அது தொல்லியல் சின்னம் என வர்த்தமானியில்பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றையதினம் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சுழிபுரம் சந்தியில் போராட்டமானது ஆரம்பமானது. பின்னர் போராட்டம் பேரணியாக பறாளாய் முருகன் ஆலயம் வரை சென்று நிறைவுற்றது.
போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, “இந்த மண் எங்களின் சொந்த மண், மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தொல்லியல் திணைகாகளமே வெளியேறு, பறாளாய் எங்கள் சொத்து, குருந்தூர் மலை எங்கள் சொத்து, கீரிமலை எங்கள் சொத்து, மயிலத்த மடு எங்கள் சொத்து, வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், ஊர் மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள், ஆலய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.