நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தண்ணிமுறிப்பு மற்றும் கிக்கிறாபுரம் மீனவர் சங்கங்களிற்கு தெரியாது மீன்பிடியில் ஈடுபட்ட சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெலிஓயா பகுதியைச் சேர்ந்த மீனவர்களே அங்கு சென்று மீன்பிடித்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த சனிக்கிழமை (5) அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடி சங்கங்கள் மற்றும் அரச அனுமதி இன்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 29 பெரும்பான்மையின சிங்கள மீனவர்களை ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர்.
தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட தண்ணிமுறிப்பு மக்களுக்கும், கிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று உள்ளூர் மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவர்களின் இவ்வாறான நடவடிக்கையினால் குளத்தில் உள்ள மீன்வளங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக உள்ளூர் மீனவர்கள் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சூழலிலேயே அந்த குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட சிங்கள மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி உபகரணங்களையும் தண்ணிமுறிப்பு குளத்தில் தொழில் செய்யும் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் போது உள்ளூர் மீனவர்களால் சிங்கள மீனவர்கள் சுற்றி வளைக்கப்பட்ட சூழலில் பலர் ஓடிவிட்டார்கள் என்று உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் பிடிக்கப்பட்ட 29 பெரும்பான்னை இனத்தினை சேர்ந்த மீனவர்ளும் அவர்கள் கொண்டுவந்த 6 வலைகள்,20 மிதக்கும்ரியூப்புக்ள் என்பன ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஒட்டுசுட்டான் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெலிஓயா மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவருவதாக பல தடவைகள் அரச திணைக்களத்திடம் எடுத்துரைத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே அத்துமீறிய மீனவர்களை உள்ளூர் மீனவர்கள் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.