(மன்னார் நிருபர்)
(7-08-2023)
மன்னார் மாவட்டத்தில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் திங்கட்கிழமை(7) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை (7) காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி திருமதி ஜே.எம்.ஏ. யக்கோ பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல் கலந்து கொண்டார்.
மேலும் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள்,வைத்தியர் ஒஸ்மன் டெனி,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள்,பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரிப்பதன் மூலம் சுற்றாடலை பாதுகாத்தலும்,முகாமைத்துவம் செய்தலும்’ எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது முதல் கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோர் இலத்திரனியல் கழிவுகளை மாவட்ட பொறுப்பதிகாரியிடம் கையளித்தனர்.
-இன்று திங்கட்கிழமை (7) தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) வரை இலத்திரனியல் கழிவுகளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ஒப்படைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.