நாடு பெருமளவுக்கு வெளிநாட்டு உதவிகளிலும் ஐ.எம்.எப் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிலும் தங்கியி ருக்கும் ஒரு காலச் சூழலில், சிங்கள பௌத்த மயமாக்கல் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. பொதுவாக ரணில் விக்ரமசிங்க மனித முகமூடி அணிந்த அல்லது லிபரல் முகமூடி அணிந்த ஒரு சிங்கள பௌத்த வாதியாகவே பார்க்கப்பட்டார். அண்மையில் கூட அவர் பேராசிரியர் தேனுவரவின் 83 ஜூலை தொடர்பான கண்காட்சியில் தன் மனைவியோடு பங்குபற்றினார்.
அதைக் குறித்து ஒரு சிங்கள ஊடகவியலாளர் விமர்சித்திருந்தார். 83 ஜூலைக்கு மன்னிப்புக் கேளாத ஓர் அரசியல்வாதி அதுபோன்ற ஒரு கண்காட்சிக்கு வந்திருக்கிறார் என்று அந்த ஊடகவியலாளர் குற்றம் சாட்டியிருந்தார்.பொதுவாக ரணில் விக்ரமசிங்கவின் காலம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதிகரித்த ஜனநாயக வெளியைக் கொண்ட ஒரு காலகட்டமாகும். ஆனால் இம்முறை அவ்வாறில்லை. சிங்கள பௌத்த மயமாக்கல் ஒப்பீட்டளவில் அதிகமாக நடக்கும் ஒரு காலகட்டமாக அது காணப்படுகிறது.
ஒருபுறம் ரணில், சிங்கள லிபரல் ஜனநாயகவாதிகளோடு காணப்படுகிறார். இன்னொரு புறம், சிங்கள பௌத்த மயமாக்கலை முடுக்கி விடுகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் யுத்தத்தில் உயிர்நீத்த எல்லாருக்குமான ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு தமிழ் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இப்பொழுது கிடைக்கும் செய்திகளின்படி அதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஒருபுறம் ரணில்,நல்லிணக்கம்,பொறுப்பு கூறல்,13ஆவது திருத்தம் போன்றவை தொடர்பில் ஐநா,மேற்கு நாடுகள், இந்தியா போன்றவற்றைத் திருப்திப் படுத்துவதற்காக சில வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் சிங்கள பௌத்த மயமாக்கலை முடுக்கி விட்டிருக்கிறார். அவரை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு முயற்சிக்கும் மேற்கு நாடுகளோ இந்தியாவோ அல்லது பன்னாட்டு நாணய நிதியமோ சிங்கள பௌத்த மயமாக்கலை நிறுத்துமாறு அவர் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லையா? அல்லது மேற்கண்ட தரப்புகள் அவ்வாறு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தரப்பு மேற்கண்ட தரப்புகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லையா?
தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் ஒப்பீட்டளவில் தீவிரமாகப் போராடுகின்றது. ஒவ்வொரு முழுநிலா நாள் அன்றும் தையிட்டியில் அது போராடுகின்றது. தையிட்டியில் ஒவ்வொரு முழு நிலா நாளின் போதும் சிங்கள யாத்திரிகர்கள் விகாரைக்கு வருவார்கள். அல்லது குறைந்தபட்சம் படைவீரர்கள் விகாரையை வணங்குவதற்கு வருவார்கள். எனவே அந்த இடத்தில் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாதம்தோறும் ஒழுங்குபடுத்தி வருகிறது.அண்மை மாதங்களாக சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருவது அந்தக் கட்சிதான். அவ்வாறான போராட்டங்களின்போது போலீசாரோடு முட்டுப்படுவதும் அந்த கட்சி தான். அவையெல்லாம் உணர்ச்சிகரமான அரசியல் விவகாரங்கள். தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர்முனை போல அக்கட்சிதான் காணப்படுகின்றது. அவ்வாறு போராட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் அக்கட்சியானது ஏனைய கட்சிகளையும் போராடுமாறு தூண்டுகிறது.ஏனைய கட்சிகளுக்கும் போராடவில்லை என்றால் மக்கள் தங்களை மறந்து விடுவார்கள் என்று தெரிகிறது. எனவே அந்தக் கட்சிகளும் போராட்ட அரங்கில் காணப்படுகின்றன.
இவ்வாறாக தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலில் கூர்முனையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி காணப்படுவது மட்டுமல்ல, அது தொடர்ச்சியாக ஏதோ ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இத்தனை போராட்டங்களின் மத்தியிலும் நிலப்பறிப்பு நடவடிக்கைகளும் சிங்கள பௌத்த மயமாக்கலும் மேலும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன என்பதைத்தான் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும்.பறளாய் முருகன் கோவிலில் காணப்பட்ட அரச மரம் தொடக்கம் தீவுப் பகுதியை ஒரு தனியான நிர்வாக அலகாக அறிவிக்கப்போவதான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கம் தமிழ் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.
ஒருபுறம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஏனைய கட்சிகளும் போராடுகின்றன. இன்னொருபுறம் அரசாங்கம் அதன் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது என்றால்,அதன் பொருள் என்ன? தமிழ்க் கட்சிகளின் போராட்டத்தால் அரசாங்கத்திற்கு நோகவில்லை என்று தானே பொருள்?
அதுதான் உண்மை. ஒரு போராட்டம் அது வன்முறைப் போராட்டமாக இருந்தாலும் சரி,அறவழிப் போராட்டமாக இருந்தாலும் சரி, அது எதிர்த் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். எதிர்த் தரப்பின் நிர்வாகத்தை முடக்க வேண்டும் அல்லது பொருளாதாரத்தை முடக்க வேண்டும்.அல்லது அனைத்துலக அளவில் எதிர்த் தரப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தமிழ்த் தரப்பின் போராட்டங்கள் அவ்வாறாக எதிர்த் தரப்புக்கு அதாவது அரசாங்கத்துக்கு பொருத்தமான அழுத்தங்களை போதுமான அளவில் கொடுக்கவில்லை என்பதனால்தான் அரசாங்கம் அதன் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளை நிறுத்தவே இல்லை. அதுவும் பன்னாட்டு நாணைய நிதியம் போன்ற அமைப்புக்களிடம் கடனுக்காகத் தங்கியிருக்கும் ஒரு காலகட்டத்தில் அரசாங்கம் இவ்வாறு துணிச்சலாக சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கிறது என்று சொன்னால் தமிழ்த் தரப்பின் அழுத்தம் காணாது என்றுதானே பொருள்?
அதுவே உண்மையும் கூட. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடாது போராடுகிறது என்பது உண்மை. அதன்மூலம் தமிழ் அரசியலை ஏதோ ஒரு விகிதமாவது அது நொதிக்க செய்கின்றது. ஆனால் அது போதாது. ஏனென்றால் அந்தக் கட்சியின் போராட்டங்கள் பெருமளவுக்கு ஒரு கட்சிப் போராட்டங்கள்தான். ஏனைய கட்சிகளோடு இணைந்து போராட அக்கட்சி தயாரில்லை. ஏனைய கட்சிகளை விசுவாசமான கட்சிகள் என்று அங்கீகரிக்கவும் அக்கட்சி தயாரில்லை. ஏனைய கட்சிகள் 13ஐ ஆதரிப்பதாகவும், அவை இந்தியாவுக்குச் சேவகம் செய்வதாகவும், தம் சொந்த மக்களைக் காட்டிக் கொடுப்பதாகவும், அவர்களிடம் நேர்மை இல்லை என்றும், உறுதி இல்லை என்றும், அவர்கள் பொய்யர்கள் என்றும், இரட்டை நாக்கர்கள் என்றும் முன்னணி குற்றம் சாட்டுகின்றது. அதுபோலவே தமிழீழ விடுதலைப் புலிகளின் நாட்களை நினைவு கூர்வதற்கு மேற்படி கட்சிகளுக்கு உரிமையும் கிடையாது தகுதியும் கிடையாது என்றும் முன்னணி கருதுகின்றது. இதனால் முன்னணி தன்னை ஒரு பரிசுத்தமான கட்சியாகக் காட்டிக் கொள்ளப் பார்க்கின்றது.
இதன் விளைவாக ஏனைய கட்சிகள் முன்னணியோடு சேர்ந்து போராடத் தயார் இல்லை. அதனால் முன்னணியின் போராட்டங்கள் பெருமளவுக்கு ஒரு கட்சிப் போராட்டங்களாகவே மாறிவிட்டன. அவை பெரும்பாலும் சிறு திரள் போராட்டங்கள் அல்லது கவன ஈர்ப்பு போராட்டங்கள்தான். பெருந் திரள் போராட்டங்கள் அல்ல. 13ஆவது திருத்தத்திற்கு எதிராக முன்னணி நடத்திய இரண்டு ஆர்ப்பாட்டப் பேரணிகளில் 2000க்கு குறையாத மக்கள் பங்கு பற்றினார்கள்.இதைத்தவிர முன்னணி தனியாக ஒழுங்குபடுத்திய எந்தப் போராட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்ட முடியவில்லை. முன்னணி மட்டுமல்ல ஏனைய எந்த ஒரு தரப்பும் தனியாக ஒழுங்குபடுத்தும் போராட்டங்களில் மக்கள் சிறிய திரளாகத்தான் கூடுகிறார்கள். சிவில் சமூகங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகள் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.சில மாதங்களுக்கு முன்பு வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு பெருந்தொகையினர் பங்குபற்றவில்லை.
அதே சமயம் அண்மையில் கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழிக்கு நீதி கேட்டு முல்லைத் தீவில் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் ஒப்பீட்டளவில் கூடுதலான மக்களைக் கொண்டிருந்தது. அதுகூட பிரமாண்டமான ஊர்வலம் அல்ல.எனினும் அண்மைக் காலங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலங்களில் அது பெரியது. இவை நமக்கு எதைகக் காட்டுகின்றன? கடந்த 14 ஆண்டுகளாக கட்சிகளும் பொதுமக்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவியோடு ஒழுங்குசெய்யும் ஆர்ப்பாட்டப் பேரணிகள்தான் ஒப்பீட்டுளவில் பெரியவைகளாக, அழுத்தமானவர்களாக அமைகின்றன. அவை தான் வெளியுலகத்தின் கவனத்தை ஈர்க்கின்றன. அரசாங்கத்துக்கு ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆர்வத்தோடு பார்த்தன. தாம் சந்திக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளிடம் அந்த ஆர்ப்பாட்டத்தைப்பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதில் அக்கறையாகவும் இருந்தன. ஆனால் அப்படிப்பட்ட போராட்டங்களை நடத்துவது என்று சொன்னால் தமிழ்த் தரப்பில் ஒன்றிணைந்த செயற்பாடு அவசியம். எல்லாக் கட்சிகளும், சிவில் சமூகங்களும்,புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் ஒரு புள்ளியில் ஒன்றுபட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஐக்கியம் இப்பொழுது ஒரு அம்புலிமாமாக் கதையாக மாறி வருகிறது. அவ்வாறு ஐக்கியம் ஏற்படாமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தூய்மைவாதமும் ஒரு காரணம். ஏனைய கட்சிகளின் செயலின்மையும் ஒரு காரணம்.
இவ்வாறான ஒரு பின்னணியில் அரசாங்கத்திற்கு நோகக்கூடிய விதத்தில் போராட்டங்கள் அமையாத காரணத்தால் அரசாங்கம் சிங்கள பௌத்த மயமாக்கலை தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளது. இப்பொழுது நடக்கும் சிதறலான,தெட்டம் தெட்டமான போராட்டங்களால் அரசாங்கத்துக்கு நெருக்கடி என்பதை விடவும் மறைமுகமாக நன்மை உண்டு என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளராக களமிறங்கும் வாய்ப்புகளை அதிகம். அப்பொழுது அவரை ராஜபக்சக்களும் ஆதரிப்பார்கள். அவ்வாறு ராஜபக்சக்கள் அவரை ஆதரித்தால் எதிர்க்கட்சிகளுக்கு அதுவே போதும், அவரை தமிழ் மக்கள் மத்தியில் தோற்கடிப்பதற்கு.
ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ்மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராகத்தான் வாக்களித்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக ராஜபக்சக்களின் ஆணையை ஏற்று போரை நடத்திய தளபதி ராஜபக்சங்களுக்கு எதிராகத் திரும்பிய பொழுது அவருக்கும் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் அதிகபட்சம் ஒன்றாகத் திரண்ட ஒரு விவகாரமாக ஜனாதிபதித் தேர்தலைக் கூறலாம். எனவே தன்னை ராஜபக்சக்களோடு சேர்த்துப் பார்த்து தமிழ் மக்கள் தனக்கு வாக்களிக்காமல் விடலாம் என்ற பயம் ரணிலுக்கு உண்டு. ஆங்கிலம் பேசும் தமிழ் நடுத்தர வர்க்கம் சில சமயம் ரணிலை ஆதரிக்கக்கூடும். ஆனால் தமிழ் வாக்குகளை திரட்டுவதில் தனக்குள்ள நிச்சயமின்மைகளைக் கவனத்தில் எடுத்து அவர் முழுக்க முழுக்க சிங்கள பௌத்த வாக்குகளைத் திரட்டுவது என்று முடிவெடுக்கலாம்.
அப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதாகத்தான் தெரிகிறது. அதனால்தான் சிங்கள பௌத்த வாக்காளர்களை கவர்வதற்காக சிங்கள பௌத்த மயமாக்கலை முடுக்கி விட்டுள்ளார். அதற்கு எதிராகத் தமிழ் கட்சிகள் நடத்தும் சிறிய கவனயீர்ப்பு போராட்டங்கள் அவருக்கு மேலும் வாக்குகளைத் திரட்டிக் கொடுக்கும். தமிழ் மக்கள் என்னை எதிர்க்கிறார்கள். நான் சிங்களவர்களுக்கு உண்மையாக இருக்கிறேன். நான் சிங்களவர்களுக்கு விசுவாசமாக சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கிறேன். அதனால் தமிழ் மக்கள் என்னை எதிர்க்கிறார்கள்… என்று அவர் சிங்களப் பகுதிகளில் கூறுவார். எனவே தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணையாத போராட்டங்கள் எதிர்த் தரப்புக்கு மறைமுகமாக உதவுவது மட்டுமல்ல சிங்கள பௌத்த பௌத்த மயமாக்கலையும் தடுக்கத் தவறிவிட்டன.