-நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜுன் மாதம் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு இம்மாதம் 23ஆம் திகதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய் பாதையில் நீர் வழங்கலிற்கு குழாய்கள் பதிப்பதற்காக நிலம் தோண்டப்பட்ட போது, அங்கு போராளிகளின் உடல் எச்சங்கள் என்று சந்தேகிக்கப்படும் உடல் பகுதிகள் மற்றும் ஆடைப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தகவல் தெரியவந்தவுடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன் மற்றும் சில உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டதால், அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் புதைக்கப்பட்டிருக்க கூடும் என்ற கவலைகளும் அச்சங்களும் எழுந்தன.
பின்னர் அந்த இடத்தை தோண்டும் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இடைநிறுத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது அந்த இடத்தின் அகழ்வு தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையில் செய்யப்படும் என்றும், சட்டவைத்திய அதிகாரிகள் உட்பட இதர திணைக்களத்தினர் இதில் ஈடுபடுவார்கள் என்று முடிவானது.
அதற்கமைய ஒவ்வொரு திணைக்களமும் இந்த அகழ்வுப் பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்று முல்லைத்தீவு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து தொடர்புடைய திணைக்களத்தினர் தமது நிலைப்பாட்டை தெரிவித்தனர். மேலும் ஜனாதிபதி அலுவலகம் இந்த அகழ்விற்கான நிதி வளங்களை ஓ எம் பி எனப்படும் காணமல் போனவர்களை தேடுவதற்கான அலுவலகம் ஊடாக வழங்கப்படும் என்று நீதிமன்றில் தெரிவித்தது.
இதே வேளை கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி விடயமாக நீதிமன்றத்தீர்வுக்கமைய நேற்றைய தினம் குறித்த இடத்தை நிபுணர் குழுவினா் பார்வையிடப்பட்டனர்.
இதன்போது தொல்லியல்த் திணைக்களத்தின் மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் 2023.08.17ம் திகதி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதாகவும், அதனையடுத்து 2023.08.21ம் திகதி முதல் மீண்டும் அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் தொடர்ச்சியாகவே பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டாலும், இதுவரை அவை தொடர்பில் காத்திரமான விசாரணையோ, அல்லது அந்த அகழ்வுப் பணிகள் சர்வதேச தரத்திற்கு நடத்தப்படவில்லை என்று அண்மையில் நான்கு மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், எதிர்காலத்தில் இப்படியான மனிதப் புதைகுழிகள் காணப்படும் போது அதை எப்படி கையாள வேண்டும், அகழ்வுப் பணிகள் எவ்வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இதேநேரம் இன்றைய தினம் புதைகுழியை பார்வையிட்ட குழுவில் நீதிபதி பிரதீபனுடன் தொல்லுயல்த் திணைக்கள அதிகாரிகள், சட்ட வைத்திய அதிகாரி, பொலிசார் எனப் பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.