நடராசா லோகதயாளன்.
முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கலில் அணைவரையும் அணிதிரள யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது.
”பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழர் நாம் நமது உரிமைகளை மீட்டெடுக்கவும், எமது மரபுகளை பேணிப் பாதுகாக்கவும்”, தமிழ் மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை குருந்தூர்மலையில் அணிதிரள வேண்டியே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதேநேரம் இப்பொங்கல் வழிப்பாடு ஏறபாட்டாளர்களிற்கு தொல்லியல்த் திணைக்களம் ஓர் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. சிங்களத்தில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்பி வைத்துள்ள தொல்லியல்த் திணைக்களம் பொங்கலின்போது கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் என 7 நிபந்தனைகளை விதித்து தொல்லியல்த் திணைக்களத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிற்கான உதவிப் பணிப்பாளர் ஒப்பமிட்டுள்ளார்.
இதனிடையே ”குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ள சமயம் அப்பிரதேச மக்களினது அல்லது வேறு எவரின் கருத்துக்களை அறியாது சிவன் ஆலயம் தொடர்பில் இந்தியாவின் கைக்கூலியான மறவன்புலவு சச்சிதானத்தம் சில சமயப் பெரியார்கள் என்ற போர்வையில் அடி வருடிகளுடன் சென்று பிக்குகளுடன் பேசியுள்ளார். அது தொடர்பில் அந்த மக்களே முடிவினை எட்ட வேண்டும் சச்சிதானந்தமும் அவரது குழுவும் இதிலிருந்து ஒதுங்க வேண்டும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.