நடராசா லோகதயாளன்
குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாட்டிற்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முயற்சியில் சிங்களத் தரப்பு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் சில வாரங்களிற்கு முன்னர் பொங்கல் வழிபாடு இடம்பெறவிருந்த சமயம் பொலிசார் மற்றும் தொல்லியல்த் திணைக்களத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டடது, தமிழ் மக்கள் பொலிசாரால் தாக்கப்பட்டதும் ஊடகங்களில் வெளியாகி அது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த விடயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையில் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் வழிபாட்டிற்கு அனுமதிக்குமாறே கூறப்பட்டதே அன்றி தடுக்குமாறு கூறவில்லை என ஜனாதிபதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.
இப்படியான பின்புலத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை (18) அன்று பொங்கல் வழிபாடு இடம்பெற ஏறபாடுகள் செய்யப்பட்டு அதற்கான அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முயற்சியில் சில சிங்களத் தரப்புக்கள் மிக மும்மரமாக ஈடுபட்டுள்ளன..
இதறகாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா) பகுதிகளில் இப்பொங்கலைத் தடுக்க சிங்களவர்களை ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து இப்பகுதியில் ஏதும் மத முரணபாடு ஏறபடுமா என்ற அச்சமும் திகழ்கிறது.
இதேநேரம் குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என்ற தீர்மானத்தை இந்து- பௌத்த மதத்தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்மானமாக எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் பௌத்த பிக்குகள் மற்றும் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவக் குருமார்களும் நேற்று ஒன்றுகூடி மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.