குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும் இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும் முடிய அறைக்குள் முடிவுகளை எடுக்க முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
குருந்தூர் மலை விடையத்தில் நீதிமன்ற கட்டளைகளை திசை திருப்பும் நோக்கில் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் சிவன் ஆலயம் அமைத்தல் என்ற பித்தலாட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். காரணம் குருந்தூர் மலையில் மிகப் பழைமை வாய்ந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அழிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் சட்டவிரோதமானது எனவும் அதனை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது அவ்வாறான நிலையில் சட்டவிரோத கட்டடங்களை அமைத்த விகாராதிபதிகளுடன் இணைந்து பிறிதொரு இடத்தில் சிவன் ஆலயம் அமைத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாகவும் நீதிமன்ற கட்டளைகளை சிங்கள ஆட்சியாளர்களும் அரச இயந்திரமும் அவமதிப்பதற்கு அப்பால் கோயில் நிர்வாகமும் அவமதிப்பதாக அமையும் அவ்வாறான ஒரு சூழ்ச்சிதான் போலி இந்து அமைப்பின் பினாமிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.
குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களமும் சிங்கள பௌத்த பிக்குகளும் மேற் கொள்ளும் திட்டமிட்ட அடாவடிகளையும் நீதிமன்ற கட்டளைகளை மீறுகின்ற செயற்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இந்த முன்னகர்வு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என் குறிப்பிட்டுள்ளார்.