இன்று 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மீனவ அமைப்புகளுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் இடையில் இடம் பெற உள்ள பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டு இலங்கை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் என்.வி. சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று முன் தினம் புதன்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட இழுவைமடி தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய சூழல் ஏற்படுட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு இலங்கை இந்தியா மீனவர்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மீனவர்கள் மாநாட்டில் இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை பேச இருக்கின்ற நிலையில் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாங்கள் வேண்டிக் கொள்வது வடபுல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு 2016 இரு நாட்டுக்கும் இடையில் வெளிவிவகார மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது இழுவை மடி தொழிலை தடை செய்யவேண்டும், இழுவை மடிகளை இல்லாது ஓழிக்க வேண்டும், இரு நாட்டு கூட்டு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
30 ஆண்டுகால யுத்தம் நிறைவடைந்த பின்னும் மீனவ மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியாத கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் என 50 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் கடலை நம்பி வாழ்கின்றனர்.
வாரத்தில் 3 நாட்கள் கூட இந்திய இழுவைமடி படகுகளால் தொழிலை தொடர்சியாக மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்றப்பட்ட நிலையில், மீனவ தொழிலை மேற்கொள்ளும் இளைஞர்கள் மாற்று தொழிலை நாடவேண்டிய சூழலுக்கு தள்ளபட்டுள்ளார்கள்.
ஆகவே இடம்பெறுகின்ற மநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடல் வாழ் உயிரினங்களை பாதிக்கின்ற இழுவை மடிக்கு எதிராக 2016 இல் ஏற்பட்ட இணக்கத்தினை பேசவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.