பு.கஜிந்தன்
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறையாற்ற தீர்மானம் காரணம் என பாடசாலை சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது பின்வரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
நேற்றையதினம் வியாழக்கிழமை குறித்த பாடசாலை மாணவர்கள் வலயமட்ட போட்டி ஒன்றுக்காக வவுனியா பம்படு பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மைதானத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த பல்கலைக்கழக விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் மண் அள்ளிய கிடங்கில் காணப்பட்ட நீரில் இறங்கிய நிலையில் வவுனியா முஸ்லிம் மகா வித்யாலய மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா தெற்கு வலயத்தின் வலயமட்டப் போட்டிகள் வவுனியா மகா வித்தியாலயத்திலும் வவுனியா நகர சபை மைதானத்திலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் ஏன் வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு மாற்றினார்கள்.
வவுனியா பல்கலைக்கழகம் மைதானம் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த மைதானத்தை தேர்வு செய்தவர்கள் கள நிலைமைகளை ஆராயாமல் மாணவர்களை ஏன் அழைத்தார்கள்.
ஏற்கனவே போட்டிகளை நடாத்திய வவுனியா நகரத்தை அண்மித்த நகரசபை மைதானம் மற்றும் மகா வித்தியாலய மைதானங்களைப் புறம்தள்ளி சுமார் 10 கிலோமீட்டர் அப்பால் உள்ள பல்கலைக்கழகம் மைதானத்தை யார் தெரிவு செய்தது.
ஆகவே குறித்த மாணவர்களின் இறப்புக்கு வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறையாற்ற தீர்மானமே காரணம் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இவ்வாறான நிலையில் வடமாகாண விளையாட்டு பணிப்பாளர் ராஜசீலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, போட்டிகளை நடத்துவது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான விளையாட்டுக் குழு முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களது பிராத்தியோக தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட போதும் முயற்சி பயனளிக்கவில்லை.
இந்நிலையில் அவரது அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய நிலையில் நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக கலந்துரையாடல் ஒன்றில் நிற்பதாக அவரது அலுவலக பெண் ஊழியர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.