மன்னார் நிருபர்
21.08.2023
மன்னார் மாவட்டத்தில் மண்டோஸ் புயலினால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் கிடைக்க பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்பட்ட 40 மீனவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (21) மன்னார் மாவட்ட செயலக ஜேக்கா மண்டபத்தில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம் பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் நிவாரணப் பணியின் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக 40 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு தலா 45.000 ரூபா பெறுமதியான வலைகள் உள்ளடங்களான மீன் பிடி உற்பத்தி பொருட்கள் கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி மெண்டோஸ் புயலினால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கும் கிளிநொச்சி மாவட்டதில் 40 குடும்பங்களுக்கும் முல்லைத்தீவு 40 குடும்பங்களுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 52 குடும்பங்களுக்கும் என மொத்தமாக 172 குடும்பங்களுக்கு குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கப்படவுள்ளது.
அதே நேரம் கடந்த மாதம் மெசிடோ நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட பெண் முயற்சியாளர்களுக்கான சவர்கார உற்பத்தி பயிற்ச்சியை பூர்த்தி செய்த பெண்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பனிப்பாளர் கலிஸ்ரன், கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் லெம்பேர்ட் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவில் உதவி பணிப்பளர் திலீபன் உட்பட பலரும் கலந்து கொண்டு மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் கைத்தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த பெண்களுக்கான சான்றிதலையும் வழங்கி வைத்தனர்.