எமது யாழ்ப்பாணம் செய்தியாளர்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தோண்டுவதற்கான செலவை நீதி அமைச்சின் ஊடாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நீதி அமைச்சு காணாமல் போனவர்களிற்கான அலுவலகம்- ஓ.எம்.பி ஊடாக மாவட்டச் செயலகத்திற்கு நிதியை விடுவித்து அதற்கான செலவு முன்கொண்டு செல்லப்படவுள்ளது. இதனால் எதிர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிய வழக்கு நடவடிக்கையை தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி தோண்டும் பணி ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை தோண்டும் பணியின்போது நீதிமன்றத்துடன் சட்ட வைத்திய நிபுணரகள் மற்றும் தொல்லியல்த் திணைக்கள நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜுன் மாதம் கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய் பாதையில் நீர் வழங்கல் குழாய்களை அமைக்க நிலம் தோண்டப்பட்ட போது அங்கு மனித எச்சங்களும் உடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பெண்கள் உள்ளாடைப் பகுதிகள் இருந்தன. அதன் காரணமாக அங்கு பெண் போராளிகள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் தோன்றியது.
இதையடுத்து அங்கு அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அது பல காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமக்கான நிதி ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.