நடராசா லோகதயாளன்
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான கலாச்சார, சமூக பொருளாதார தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. குருந்தூர் மலையில் ஆதி சிவன் கோவிலில் தமிழ் மக்கள் வழிபாடு செய்ய தடங்கல்களை ஏற்படுத்துவது, தமிழ் மக்களின் வாழ்வாதார இடங்களை அரச படைகள் பிடித்து வைத்துள்ளன, மக்களின் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது என்று தொடர்ச்சியாக அரச தரப்பும், தொல்லியல் திணைக்களம் என்கிற போர்வையில் பௌத்த பிக்குமார்களும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் செய்து வரும் தொழிலிற்கும் தொடர்ச்சியக இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் திங்கள்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் வைத்து இதேபோன்று படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்படியான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் எனவும் மீனவர்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தண்ணிமுறிப்புக் குளத்தில் அதனை அண்டிய பகுதியில் வழும் தமிழ் மற்றும் முஸ்லாம் மீனவர்கள் மட்டுமே தொழில் புரியும் நிலையில் ஆண்டுதோறும் அத்துமீறிய மீன்பிடியில ஈடுபடும் சிங்கள மீனவர்களினால் குழப்பம் ஏற்படுவதோடு அண்மையில் தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள மீனவர்ளை பிடித்து தமிழ் மற்றும் முஸ்லீம் மீனவர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
வெலிஓயா பகுதியிலிருந்து சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் முல்லைத்தீவு பகுதிக்கு வந்து மீன்படி தொழிலில் ஈடுபடுகின்றனர், இதை அரச தரப்பின் பார்வைக்கு எடுத்துச் சென்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ச்சியாக இப்படியாக தமது படகுகள் எரிக்கப்பட்டால், தாம் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாமல் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாக உள்ளூர் மீனவர்கள் குமுறுகின்றனர்.