யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ளுதல், பெற்றோல் குண்டு அடித்தல், பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், வாகனங்களை தீயிட்டு எரித்தல் போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறுகளில் வைக்குமாறு யாழ் நீதவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் மேற்படி சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்கள் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் முகவர்களுடாக அவர்களிடம் பணம் பெற்று கூலிப்படையாகச் செயற்பட்டு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கள்வியங்காட்டுப் பகுதியில் பெண்களின் ஆடை அணிந்து வீட்டினை நாசப்படுத்தி எரித்தமை கீரிமலைப் பகுதியில் ஒரு லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுத் தாக்குதல் மேற்கொண்டமை, திருநெல்வேலியில் மருத்துவர் வீட்டில் பெற்றோல் குண்டு அடித்தமை, கோப்பாய் பால்பண்ணை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீதான தாக்குதல் போன்ற பின்னணியில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.