நடராசா லோகதயாளன்
மன்னார் மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் பிடியில 26 ஆயிரத்து 627 ஏக்கர் மக்களின் நிலம் உள்ளபோதும் அதில் 5 ஆயிரத்து 459 ஏக்கரை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 1985 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த காடுகளின் எல்லைக்கு அமைகாவே திணைக்களங்கள் உரிமை கோரும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு ஏற்ப அவற்றை இனங்கண்டு பாதுகாப்பதோடு மக்களிற்கு சொந்தமான எஞ்சிய நிலத்தை விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜனாதிபதி செயலகத்தினால் அமைக்கப்பட்ட விசேட குழுவற்கு மாவட்டச் செயலகங்கள் தமது பரிந்துரையை அனுப்ப விசேட குழு ஆய்வின் பின்னர் மாவட்டங்கள்தோறும் கூட்டம் நடாத்தி நில விடுவிப்பு தகவலை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் ஏற்கனவே வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட கூட்டங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மன்னார் மாவட்ட கலந்துரையாடலும் நிறைவுற்றுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் பிடியில் இருக்கும் 26 ஆயிரத்து 627 ஏக்கர் மக்களின் நிலங்களையும் மேச்சல் தரவைக்காக 4 ஆயிரத்து 393 ஏக்கர் நிலமும் கோரப்பட்டது.
இவ்வாறு கோரப்பட்ட நிலங்களில் இருந்து 5 ஆயிரத்து 459 ஏக்கர் நிலம் மட்டும் விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதோடு மேச்சல் தரை நிலம் தொடர்பில் தேசிய குழுவிற்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியவை தொடர்பில் மீண்டும் கூடி ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டபோதும் இக்கலந்துரையாடலில் பங்குகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரகளான காதர் மஸ்தான் மற்றும் ரிசாட் பதியுதான் போன்றோர் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவில் சில இடங்களேனும் விடுவிக்கப்பட்டபோதும் முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் 11 இடங்கள் கோரப்பட்டபோதும் ஒரேயொரு இடம் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஐ நா மனித உரிமைகள் ஆணையத்திற்கு இலங்கை அரசு தெரிவித்துள்ள பதிலில், 92 வீத நிலங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டன என்று கூறினாலும், இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் படையினர் மற்றும் இதர அரச திணைக்களங்கள் பிடியிலேயே உள்ளன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை அவர் இலங்கைக்கான கனேடிய தூதர் எரிக் வால்ஷ் உட்பட பலரிடம் கையளித்துள்ளார்.