கனடாவில் கனடியத் தமிழர்கள் நடத்திய ‘தெருவிழாவில்’ சிறப்புரையாற்றிய இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிப்பு
இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் கொழும்புத் தலைநகரிலும் வாழும் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் தமிழர்களாக கரங்கள் கோர்த்து நின்றால் அவர்களின் பலம் இன்னும் ஓங்கி நிற்கும் என்று நான் நம்புகின்றேன். அப்போது தான் அங்கு தமிழ் மக்களை அடக்கியும் ஒடுக்கியும் அடிமைப்படுத்தியும் நடத்திவரும் பெரும்பான்மையினர் எம்மை நடுக்கத்தோடு திரும்பிப்பார்ப்பார்கள்.
அதற்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக அதிகளவில் கனடாவில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் இலங்கை வாழ் தமிழர்களை நோக்கி “நாங்கள் உங்களுக்காக இங்கே இருக்கின்றோம்.
நீங்கள் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை’ என்று குரல் கொடுத்தால்தான் எம்மை அடக்கி ஒடுக்க நினைக்கும் எதிரிகள் அஞ்சுவார்கள். எனவே கனடா வாழ் பலமிக்க தமிழ் மக்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்காக தங்கள் குரலை உயர்த்தி ஒலித்திடச் செய்ய வேண்டும்”
இவ்வாறு கனடாவில் கனடியத் தமிழர் பேரவை நடத்திய ‘தெருவிழாவில்’ சிறப்புரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்த இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்ர் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழர் தெருவிழாவில் சிறப்புரையாற்றியபோதே மக்களின் கரகோசத்தின் மத்தியில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
“இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை மேற்கொண்டு வரும் அந்த அடக்குமுறையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் ‘உங்களுக்காக நாங்கள் இங்கு இருக்கின்றோம். நீங்கள் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை’ என்று குரல் கொடுக்க வேண்டும்.
மேலும் இலங்கையில் மலையக மக்களின் நலன்களை கவனிக்கும் முயற்சியில் கனடிய தமிழர் பேரவை எடுத்து வரும் நடவடிக்கைகளை நான் பாராட்டுகின்றேன். மலையகத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு விஞ்ஞானக் கூடம் அமைத்துத் தர தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்’
இவ்வாறு மனோ கணேசன் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.