பு.கஜிந்தன்
அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன. இனவாத மதவாத சக்திகள் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா? இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்தார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அறகலய போராட்டக்காரர்களுக்கு முறைமை மாற்றம் ஒன்றை செய்வோம் என்று உறுதிமொழி வழங்கியவர்கள் இன்று இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் தங்கள் உறுதிமொழிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்களா?
இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி ஆட்சி பீடம் ஏறியவர்களை நாட்டு மக்களே தவறை உணர்ந்து கொண்டு அறகலயப் போராட்டத்தை முன்னெடுத்து துரத்தினார்கள்.
போராட்டக்காரர்கள் முன்வைத்த முறைமை மாற்றம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்திற்குள் அதை செய்து முடிப்பதாக உறுதிமொழி வழங்கிவிட்டு இன்னும் அது பற்றி எதுவுமே செய்யாது உள்ளனர்.
மாறாக மீண்டும் இனவாத மதவாத கோஷங்களை எழுப்பிக் கொண்டு தாங்கள் போராட்டக்காரருக்கு வழங்கிய உறுதிமொழிகளை மடைமாற்றம் செய்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக சரத் வீரசேகர, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள புத்த பிக்குகள் உட்பட பலர் அறகலய போராட்ட காலத்திலும் பின்னரும் தலைமறைவாக அஞ்சி வாழ்ந்தனர்.
போராட்டக் காரர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர். இன, மத பேதங்களை கட்டவிழ்த்து ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடித்தனர் என்பதே போராட்டக் கார்கள் முன்வைத்த வாதம். அதற்கு பரிகாரமாக முறைமை மாற்றத்தை கோரினர்.
புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி அக்கோரிக்கையை நிறைவேற்ற உறுதிமொழி வழங்கி மூச்சு விட்டவர்கள் அதை நிறைவேற்றாமல் இனவாத மதவாத கருத்துக்களை எழுச்சி பெற வைத்து நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முயலுகிறார்கள்.
பொருளாதார சிக்கல்களில் இருந்து நாடு சுமுகநிலையை அடைந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாலும் முறைமை மாற்றம் சம்பந்தமாக எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை கைக் கொள்ளவில்லை. இந்த காலக்கெடு முடிந்து போராட்டக்காரர்கள் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு தங்கள் உறுதி மொழிகளில் இருந்து தப்பிப்பதற்கும் போராட்டக்காரர்களை ஏமாற்றுவதற்கும் முயற்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் உறுதியாகி வருகிறது.
சிங்கள மக்கள் குறிப்பாக போராட்டக் காரர்களை இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனவாத மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சி பீடம் ஏற இடமளிக்கக் கூடாது. இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் – என குறிப்பிடப்பட்டுள்ளது.