நடராசா லோகதயாளன்
இலங்கையில் போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆனாலும், போரின் போது காணாமல் போனவர்கள் அல்லது படையினரிடம் சரணடைந்தவர்கள் அல்லது கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன ஆனது என்பதற்கான பதில் இன்றுவரை இல்லை.
அவர்களுக்கான நீதி கோரியும், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தாய்மார் முன்னெடுத்துள்ள போரட்டாம் 2383 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் புதன்கிழமை (30) அன்று சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
ஒகஸ்ட் 30 ஆம் திகதி ஐ நாவால் சர்வதேச காணாமல் போனோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணியானது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கியது. உறவுகளை தேடிய இந்த கவன ஈர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயம்வரை பேரணியாகச் சென்று நிறைவுபெற்றது.
இதே போன்ற பேரணிகள் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களிப்பில் இடம்பெற்ற பேரணியில் பல சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர்களும், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொடவின் பாரியார் சந்தியா எக்நலிகொடவும் தமிழ் மக்களுடன் இணைந்து பங்கேற்றனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பேரணியாக சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காந்திபூங்காவில் உள்ள கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு கிழக்கில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தமது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் -ஓ எம் பி யும் வேண்டாம், உண்மையை கண்டறியும் குழுவும் வேண்டாம், சர்வதேச விசாரணை பொறிமுறையே வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதேவேளை மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத நபர்களால் இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. காணாமல் போன உறவுகளை தேடுபவர்கள் வெளிநாடுகளிலிருந்து டொலர்களைப் பெற்றுக்கொண்டு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என்ற வகையில் சித்தரிக்கும் சுவரொட்டிகள் கிழக்கில் பட இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.