இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக நாளை தினம் (செப்டெம்பர் 05) பிரித்தானியாவின் செனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக ’தி டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
’டிஸ்பாட்சஸ்’ என்ற தலைப்பிலான ஆவணப்படங்களின் தொடரில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு விசாரணையின் அடிப்படையில் குறித்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக ’தி டைம்ஸ்’ தெரிவிக்கின்றது.
ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக, இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடனான ஒரு சந்திப்பை சிரேஷ்ட இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலேவுடன், தான் ஏற்பாடு செய்ததாக, அந்த ஆவணப்படத்தில் உள்ளக தகவல்களை அறிந்ததாக கூறும் உயர் மட்டத்தில் உள்ள ஒருவர் கூறியுள்ளதாக ’தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த தாக்குதலில் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் 8 பேர் உட்பட 275க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
”கூட்டம் நிறைவடைந்தவுடன் சுரேஷ் சாலே என்னிடம் வந்து, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் ஒன்று தேவைப்படுகிறது, அவர் வெற்றிபெற அது ஒன்றே வழியாகும்” என அந்த உள்ளக தகவலை வெளியிட்டதாக கூறப்படும் ஹன்சீர் அசாத் மௌலானா கூறியதாக ’தி டைம்ஸ்’ கூறுகிறது.
அது மாத்திரமன்றி “அந்த தாக்குதல் திட்டம் ஒன்றிரண்டு நாட்களில் உருவாக்கப்படவில்லை, அது இரண்டு, மூன்று வருடங்களாக திட்டமிடப்பட்டது” எனவும் அவர் கூறியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின்னர், சாலே இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவராக பதவி உயர்வுப் பெற்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் நாட்டில் ஆறு மாதங்களில் மீண்டும் பாதுகாப்பை தான் உறுதி செய்வேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் கோட்டாபய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.
அந்த தாக்குதல்களில் சக்தி வாய்ந்த ராஜபக்சக்களின் குடும்பம் ஈடுபட்டிருந்ததாக இலங்கையில் நீண்டகாலமாக பேச்சுக்கள் இருந்தன. எனினும் செனல்-4 ஆசிரியர் பென் டி பெர்’இன் (Ben de Pear) பேஸ்மெண்ட் பிலிம்ஸ் (Basement Films) தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆவணப்படத்தில், முதல் முறையாக இந்த தாக்குதலில் உயர்மட்டத்திலிருந்தவர்களின் ஈடுபாடு இருந்தது என்பதை உள்ளக தகவலறிந்தவர்கள் கூறியுள்ளதாக ’தி டைம்ஸ்’ தெரிவிக்கின்றது.
மௌலானா கடந்த வருடம் இலங்கையிலிருந்து வெளியேறி தனது வாக்குமூலத்தை ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தெரிவித்தார்.
அவர் கூறியது நம்பகத்தன்மை வாய்ந்து மற்றும் புலனாய்வு செய்ய உகந்தது என அவர்கள் கருதுகின்றனர்.
இதேபோன்று பெயரிடப்படாத சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவரும் குண்டுதாரிகளுக்கும் சாலேவிற்கும் தொடர்பு இருந்ததாக மௌலானா கூறுவதில் உண்மை இருப்பதாக கூறியுள்ளார். அதுமாத்திரமன்றி அந்த தாக்குதல்களுக்கு முன்னரும் பின்னரும் பொலிஸ் விசாரணைகளை இராணுவப் புலனாய்வு அமைப்பினர் தடுத்ததாகவும், அந்த இரண்டாவது நபர் கூறியுள்ளதாகவும் ’தி டைம்ஸ்’ செய்தியில் கூறப்பட்டுள்ளது.
”2019ஆம் ஆண்டு இந்த கட்சி பதவிக்கு வந்தவுடன், அந்த விசாரணை தொடர்புடைய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர், புலனாய்வு முற்றாக சதி செய்து முறியடிக்கபட்டது” என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி, ஐ.எஸ் வலையமைப்புடன் இருக்கும் தொடர்புகள் குறித்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளை இராணுவ புலனாய்வு அமைப்பினர், போலியான பல தகவல்களை, திசைத் திருப்ப முயன்றதாக தெரிவதாக, செனல் 4 ஆவணங்கள் காட்டுவவதாக அமைந்துள்ளதாக ’தி டைம்ஸ்’ செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வு அமைப்பு அந்த குண்டு தாக்குதல்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இலங்கையை எச்சரித்ததாக, இதர ஆவணங்கள் காட்டுவதாக, அந்த ஆவணப்படம் குறிப்பிடுவதாக, ’தி டைம்ஸ்’ செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அந்த குண்டு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் அறிக்கையை அந்த சமயத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச வெளியிட மறுத்திருந்தார்.
உயிரித்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்று தேவையென, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கடந்த ஆண்டு, பாப்பரசரிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார். குண்டுதாரிகளுடன் சாலே தொடர்புபட்டிருந்தார் எனக் கூறும் மௌலானாவின் வாக்குமூலம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மௌலானா பல ஆண்டுகள் ராஜபச்சக்களின் விசுவாசியாக இருக்கும் பிள்ளையானுக்கு உதவியாளராக பல ஆண்டுகள் இருந்துள்ளதாகவும், தனது அரசியல் எதிரிகளை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் இருந்த போது பிள்ளையான் குண்டுதாரிகளை சந்தித்துள்ளதாகவும், ’தி டைம்ஸ்’ செய்தி கூறுகிறது.
கொலைகளில் மாத்திரமே, ஆர்வம் கொண்டிருந்த பயங்கரவாதிகளை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை பிள்ளையான் உடனடியாக கண்டதாக, மௌலானா கூறியதாக, அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, ’தி டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
“அவர்களுக்கு இந்த உலகில் எதிலும் ஆர்வம் இல்லை, அவர்களை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்” என பிள்ளையான் கூறியதாக மௌலானா தெரிவித்துள்ளார். அவர்களை சிறையிலிருந்து விடுவிக்க பிள்ளையானும் சாலேயும் வழி செய்தனர், பின்னர் அவர்களை சாலே சந்திப்பதற்கு அவர் ஏற்பாடு செய்தார் என மௌலான கூறியுள்ளதாக ’தி டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற தினம், காலை சாலேயிடமிருந்து தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குச் சென்று அவர்களில் ஒருவரை அழைத்துவரும்படி கூறியதாகவும் மௌலானா கூறியுள்ளார். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. குண்டுதாரி ஒருவர் அந்த ஹோட்டலில் இருந்த போது தொலைபேசி அழைப்பு ஒன்றை பெற்றமை, சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது. அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி, சில மணி நேரங்களுக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளார்.
இதேவேளை, செனல் 4ற்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இந்த குற்றச்சாட்டுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” எனவும் அந்த ஆவணப்படத்தில் பேசியுள்ளவர்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை எனவும் சாலே மறுத்துள்ளார். குண்டுதாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படும் நாளில் தான் இலங்கையில் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என அந்த கடிதத்தில் சாலே மேலும் கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படம் தொடர்பில் செனல் 4 பிள்ளையான் மற்றும் ராஜபக்ச குடும்பத்தாரின் கருத்துக்களை கோரியபோதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்களை உள்ளடக்கிய, இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka’s Killing Fields) என்ற ஆவணப்படம், கடந்த 2011ஆம் ஆண்டு ஜுன் 14ஆம் திகதி செனல் 4 வெளியிட்டிருந்தது. எவ்வாறெனினும், இலங்கை பாதுகாப்புப் படையினர் மீதும், அரசாங்கத்தின் மீதும் குறித்த ஆவணப்படத்தின் ஊடாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
இந்த ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி “இலங்கையின் கொலைக்களம்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” (Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished) என்ற தலைப்பில் 2012, மார்ச் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது.