இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன. இலங்கை சிவபூமி. புத்தர் வரும் போது சைவக் கோயில்கள் இருந்தன. சைவக் கோயில்கள் படிப்படியாக பௌத்தர்கள் விகாரைகளை கட்டத் தொடங்கினீர்கள். அப்பொழுது இருந்த கோயில்களே இன்றுவரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக்கோயில்களை கட்டவில்லை என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 25மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. இந்நிலையில் 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காக பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்னை? வடக்கு,கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது என்று பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் நேற்றையதினம் (03) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தெற்கிலங்கையில் சைவ கோயில்கள் இருக்கின்றன. எனவே, வடக்கு – கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க.
புத்தர் இலங்கைக்கு வந்த நாளில் முருகனுக்குத் தைப்பூச விழா. இலங்கை மக்கள் அனைவரும் கூடி எடுத்த விழா மாணிக்க கங்கையில் விழா. இலங்கையின் ஆதிக்குடிகள் சைவர்களே புத்தரை
வரவேற்றார்கள். தைப்பூச நாளில் வரவேற்றார்கள்.கதிர்காமத்தில் இருந்து காங்கேசன்துறை வரை நீண்ட, சிலாபத்தில் இருந்து மட்டக்களப்பு வரை அகன்ற, 66 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன.
இலங்கை சிவபூமி. புத்தர் வரும்போது இருந்தன சைவக் கோயில்கள். படிப்படியாக பௌத்தர்கள் விகாரைகளை கட்டத் தொடங்கினீர்கள்.
அப்பொழுது இருந்த கோயில்களே இன்று வரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக் கோயில்களை கட்டவில்லை. பழைய சைவக் கோயில்களையே திருப்பணி செய்து புதுப்பிக்கின்றார்கள்.
மதவாச்சிக்கு வடக்கே ஈரற்பெரியகுளத்தில் பிள்ளையாருக்கு அருமையான கருங்கல் கோயிலை இக்காலத்தில் எழுப்பியவர் சைவத்தமிழர் அல்ல. பௌத்தராகிய சிங்களவர். நீங்கள் போய் பாருங்கள்.
‘மூஷிக வாகன…’ எனத் தொடங்கும் கணபதி தெய்யோ மந்திரத்தைத் தன்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்காத புத்த சிங்கள தாய் ஒருவர் இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்.
புத்தர் வரும் முன்பும் வந்த பின்பும் பல நூற்றாண்டுகளுக்கு இலங்கையில் விகாரைகள் இல்லவே இல்லை. ஏதோ போகட்டும் என்று சைவர் ஆகிய நாங்கள் விகாரைகளைக் கட்ட உரிமம் தந்தோம்.
விஜயன் வந்த பின்பும் அநுராதபுரம் சைவ சமய பிரதேசம். ஆண்ட அரசர்களின் பெயர்கள்: சிவன், மூத்தசிவன், மகாநாகன். முற்று முழுதாகச் சைவத் தமிழ்ப் பெயர்கள். சைவர்களின் தயவில் கட்டியவையே இப்பொழுது தென்னிலங்கையின் புத்த விகாரைகள்.
புத்த விகாரைகளைக் கட்டினாலும் அங்கே சிவலிங்கம் வேண்டும், திருமால் வேண்டும் இலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை,காளி வழிபட வேண்டும் வைரவர் வழிபட வேண்டும். தமிழ் பெண்ணாகிய
பத்தினியை வழிபட வேண்டும். எனவே,நீங்கள் விகாரைக்குள்ளே சைவக்கோயில்களை கட்டி வைத்திருக்கிறீர்கள்.
ஏனென்றால் உங்களுக்குத் தெரியும். இலங்கை சிவபூமி. இச் சிவ பூமியில் சைவக் கோயில் இல்லாத இடம் இருக்கவிடக்கூடாது எனப் பௌத்தராகிய நீங்களே நினைக்கிறீர்கள் சைவத்தமிழ்
பெண்ணான பத்தினியைப் புத்த விகாரைகளுள் அமைத்தவன் முதலாம் கஜபாகு.
இலங்கையில் நீங்கள் கணபதி தெய்யோ என்று நாளும் மனதாலும் உடலாலும் நெக்குருகி வழிபடுகின்ற போற்றுகின்ற பிள்ளையார் வழிபாட்டை பௌத்தரிடையே பரவலாக்கியவன் நரசிம்ம பல்லவனின் யானை படைத் தளபதி மாறவர்மன். வாதாபி சென்று வெற்றியோடும் பிள்ளையார் சிலைகளோடும் இலங்கை வந்தவன். அதே நரசிம்மம் பல்லவன் தெற்கே தேவேந்திர முனையில் தென்னாவரம் சிவன் கோயிலை பல்லவ பாணியில்கட்டுவித்தான் என்பதை நான் சொல்லவில்லை. மேலைநாட்டு வணிகப் பயணி கால்மாஸ் இன்டிகோப்ளூஸ்ரஸ் சொல்கிறார். அறிவை அடகு வைத்து விளாசுகின்ற உங்களுக்கு இந்தச் செய்தி தெரிய வாய்ப்பில்லை.
முதலாம் பராக்கிரமபாகு, மகன் விக்கிரமபாகு, மகன் இரண்டாம் கயபாகு யாவரும் சைவத்தைப் பேணிய அரசர். சைவத்தமிழ் பாண்டிய சந்திரகுல வம்சத்தினர் எனக் குல வம்சமே பூசா
வழியே கூறுவதைப் படித்தது உங்களுக்கு நினைவில்லையா?
கந்தளாயில் சதுர் வேதி மங்கலத்தில் அடைக்கலமாகிய இரண்டாம் கஜபாகுவை நீங்கள் மறந்துவிட முடியுமா?
அதற்குப் பின், இரண்டாம் நான்காம் ஆறாம் பராக்கிரமபாகு காலங்களில் இலங்கையின் தென்முனையில் தென்னாவர நாயனார் கோயிலையும் அங்கு சதுர்வேதி மங்கலங்களையும் அம்மன்னர்கள் ஆதரித்ததை செப்பேடுகளாக கல்வெட்டுகளாகக் காணலாமே. நீங்கள் படிக்கவில்லையா? வழிபாட்டிடங்களைப் பாதுகாக்கும் மூச்சிங்கள தம்பதெனியா, கம்பளை,கோட்டை மன்னர்களின் கல்வெட்டுகளில் முதலில் புத்த விகாரை, பின் சதுர்வேதி மங்கலம், பின் சைவத் தேவாலயம் யாவையும் முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என எழுதியதை நீங்கள்படிக்கவில்லையா?,
சீனப் பயணி செங்கோ வழிபட்டுத் தமிழில் போற்றிக் கல்வெட்டு எழுதிய கோயிலே தென்னவரம். அந்தக் கல்வெட்டு இன்றும் கொழும்பு அருங்காட்சியகத்தில் இருக்கிறதே நீங்கள் பார்க்கவில்லையா?
மொரொக்கோ நாட்டுப் பயணி முகமதியரான இபன் பதுதா கண்டு ஆரவாரித்த கோயிலன்றோ தென்னவரம். பயணக் குறிப்புகளைப் படிக்கவில்லையா? இலங்கையில் தமிழ் சைவர்கள்
எவராவது புத்த விகாரையை இடித்த வரலாறை நீங்கள் சொல்ல முடியுமா? ஆனால், கோட்டை அரசன் மாயா துன்னையின் மகன் முதலாம் இராசசிம்மன் எத்தனை புத்த விகாரைகளை
இடித்தான்? தலதா மாளிகையை இடிக்க முயன்றான் – என அங்கே இன்றும் ஓவியம் இருக்கின்றமை உங்களுக்குத் தெரியாதா?
தென்னிலங்கையில் உள்ள சைவக் கோயில்கள் ஆதியான கோயில்கள்.அவற்றை இப்பொழுது யாரும் கட்டவில்லை. அங்கு சைவர்கள் இருப்பதால் அந்தக் கோயில்கள் தொடர்கின்றன.
வடக்கு – கிழக்கில் பௌத்தர்கள் 1948வரை 4வீதம். அவர்களுக்கான புத்தவிகாரைகள் இருந்தன.சைவத் தமிழ்த் தாயகத்தில் அத்துமீறிய அரச குடியேற்றங்களின் பின்பு அங்கும் விகாரைகளைப் புதிதாக அமைத்தீர்களே!
பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்த விகாரை களைக் கட்ட வேண்டாம். சைவத் தமிழர்களின் மனதை நோகடிக்க வேண்டாம். இவ்வாறு வடமாகாணப் புத்த பீடத் தலைவரும் நாக
விகாரைப் புத்த பிக்குவும் உங்களுக்கு எடுத்துக் கூறிய செய்தி வந்த அச்சு மை காயவில்லையே. அதற்குள் அவசரப்பட்டு உங்கள் அறியாமையை விளாசுகிறீர்களே.
தென்னிலங்கையில் சைவக் கோயில்கள் இருப்பதால் தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகளை கட்ட வேண்டும் என்று சொல்கின்ற உங்களுக்கும் அறிவை அடகு வைத்த பௌத்தர்களுக்
கும் சொல்கிறேன் – தென் இலங்கையில் சைவக் கோயில்கள் அநாதியானவை.
அவற்றை இன்றைய தமிழர் தாயகச் சைவர்கள் அமைக்கவில்லை. தவறான வரலாற்றை திணிக்காதீர்கள். போரில் வென்ற வீறாப்பில் பௌத்த மேலாதிக்கத்தைத் திணிக்காதீர்கள்.
கத்தோலிக்கரும் – கிறிஸ்தவரும் கடந்த சில நூற்றாண்டுகளில் போரில் வென்ற பின்பு சைவக் கோயில்களை உடைத்தார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டி எழுப்பினார்கள்.
கத்தோலிக்கரும் கிறிஸ்தவரும் சைவத்தமிழ்த் தாயகத்தில் சைவர்களை அழிக்க முயன்றதுபோல், இப்போது போரில் வென்ற பௌத்தர்களாகிய நீங்களும் சைவத்தமிழ் தாயகத்தில்
சைவர்களை அழிக்க முயல்கிறீர்கள்.சைவர்களை அடக்க – ஒடுக்க – அழிக்க நினைக்காதீர்கள் – வெற்றி பெற மாட்டீர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.