கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பௌத்த விகாரை நிர்மாணிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க மறுத்துள்ள நிலையில், நேற்று கூட்டமொன்றில் நுழைந்த பிக்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கிழக்கில் எந்தவொரு சட்ட விரோதமான தடைகளையும் ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை எனவும், உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் திருகோணமலை மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தை முற்றுகையிட்ட பிக்குகள் குழுவிடம், அவர்கள் மோசமான முன்னுதாரணத்தை காட்டுவதாகவும் நேரடியாகக் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளிடம் ஆளுநர் கூறுகையில், ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தை முற்றுகையிட்டதன் மூலம் அவர்கள் நாட்டின் பிற பகுதிகளிலும் இதைச் செய்ய பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள் என்று தெரிவித்த போது பிக்குகள் தங்கள் கோரிக்கைகளுக்கு அடிபணிய மறுத்தால் ஆளுநரின் கழுத்தை அமுக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், பௌத்த விகாரையை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரம் பெறப்படாத நிலையில், தனது நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை என ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலுப்பைக்குளம் பகுதியில் உள்ள தமிழ் கிராமம் ஒன்றில் பௌத்த விகாரை நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு தொண்டமான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தை முற்றுகையிடுவதற்கு முன்னர் ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலையில் பிக்குகள் தலைமையில் வீதி மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி பௌத்த பிக்குகள் சிரேஸ்ட காவல்துறை அதிகாரியின் சீருடைக் காலரைப் பிடித்துக்கொண்டு வாகன ஓட்டிகளை வார்த்தைகளால் திட்டியதையும் காணமுடிந்தது என்றும் செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்
பின்னர் பிக்குகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதுடன், இவ்விடயம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை முழுயாக விளக்கினார் என்றும் அறியப்படுகின்றது.