மன்னார் நிருபர்
(04-09-2023)
முல்லைத்தீவு மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு 04-09-2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பயனாளிகளுக்கு தலா 45 ஆயிரம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு, அளம்பில் தெற்கு, வடக்கு, செம்மலை கிழக்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த பயனாளிகளுக்கு குறித்த கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலர் சூ.செ.ஜான்சன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட 172 பயனாளிகளுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.