பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி ஒருவருக்கு ஊசி மருந்து ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்க வேண்டிய துப்பாக்கிய சூழல் ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், காய்ச்சல் காரணமாக குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்புக்காக ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டது.
ஊசி ஏற்றப்பட்ட மறுநாள் இரவு சிறுமி வலியினால் அவதிப்பட்ட நிலையில் குறித்த விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய்நிலை தொடர்பில் தாயார் கூறிய போது ஊசி ஏற்றப்பட்டால் நோய் இருக்கும் என விடுதியின் தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டமை உணர்ந்த வைத்தியர்கள் அதனை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்த நிலையில் சனிக்கிழமை காலை சத்திர சிகிச்சை மூலம் குறித்த சிறுமியின் மணிக்கட்டுக்குட்பட்ட பகுதி அகற்றப்பட்டது.
சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதியின் பொறுப்பு வைத்தியர் குறித்த தினத்தில் கடமையில் இருந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழும் நிலையில் விடுதியில் இருந்த தாதியர்களின் அலட்சியப் போக்கும் சிறுமியின் கை அகற்றப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடம்பெற்ற சம்பவம் மனவேதனையை உண்டு பண்ணும் ஒரு சம்பவமாக பார்க்கிறேன்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணை குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளேன்.
விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கையை இழந்த சிறுமியின் தாயின் தந்தையின் (பேரன்) ஊடக சந்திப்பு (சுப்பையா கனகநாயகம்)