யாழ்ப்பாண அரசின் தலை நகரமாகும் நல்லூரில் (நல்ல+ ஊர்) எழுந்தருளி இருக்கும்
நல்லைக் கந்தனின் திருவிழா உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் சைவர்களின் பெருவிழா.
தினமும் ஓம் ஓம் ஓம் என்று ஓதிக் கொண்டு கந்த புராணக் கலாச்சாரத்தில் வாழும் தமிழ் சைவர்களுக்குகுறிஞ்சிக் குமரன் என்றும் பெருந் துணையாக விளங்குகின்றார்.
நல்லூர் கந்தனின் தலப் பெருமை என்றும் உயர்வானது
நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரே சொல்லு தமிழ் எங்கே சுடர் மிகு சைவம் எங்கே என்ற பெருமையுடன் அறிஞர்களையும் , புலவர்களையும், வித்தகர்களையும் , குணவான்களையும் , அன்பர்களையும் , பக்தர்களையும் கொண்டிருக்கும் நல்லூரில் அழகு என்ற சொல்லுக்கு முருகா என்ற பொருளில் அழகாகவும் , அலங்காரமாக வும் , அருளாகவும் எழுந்தருளி பக்தர்களை அருள் ஆட்சி செய்யும் கந்தப் பெருமானின் திருவிழா நல்லூரில் மட்டுமல்ல , யாழ் மாநகரில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எங்கெல்லாம் ஈழத் தமிழ்ச் சைவர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் பெருவிழா வாக் கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
முருகப்பெருமான் ஞானப் பழத்திற்காக மயில் ஏறி உலகை சுற்றி வந்தார். இன்று நாம் அமைதியைத் தேடி , சமாதானத்தைத் தேடி ,சமத்துவத்தைத் தேடி , கல்வியைத் தேடி , நீதியைத் தேடி , நிதியைக் தேடி கண்டங்கள் தாண்டி , மாகடல்கள் ( சமுத்திரங்கள்) தாண்டி உலகெங்கும் ஓடுகின்றோம்.
கந்தா கடம்பா நீதியை , சமாதானத்தை , சுதந்திரத்தை, மனிதாபிமானத்தை , நேர்மையை , ஒற்றுமையை பொதுமக்களுக்கும் , மக்கள் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் கொடுத்து மக்கள் நிம்மதியாகவும், வளமாகவும் வாழ அருள் செய்யும் ஐயா.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர் வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச் சாந்துணைப்
போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
வளம் படைத்தோர் , வளம் (செல்வம் ) இல்லாதோர் என்ற வேறுபாடு இல்லாமல் இன்று வரை ஒரு ரூபாவுக்கு அர்ச்சனை செய்து வழிபடக்கூடிய ஒரு பெருங்கோயில் உலகில் உண்டு என்றால் அது எங்கள் நல்லைக் கந்தன் திருக்கோயிலே.
திருவிழாக் காலத்தில் வேலனின் அழகு, அலங்காரம் , விதம் விதமான வாகனங்கள்
( மயில் , கடா, இடும்பன் , குதிரை) ஊர்திகள் ( மஞ்சம், கைலாச வாகனம் , சப்பரம், தேர் ) என எத்தனை விதமான கண்கொள்ளாக் காட்சிகளைப் கண்டு வேலனை ஆறுமுகப் பெருமானை பக்தர்கள் உள்ளம் குளிர வழிபடுகின்றார்கள். ஊடகங்கள் இவற்றை உலகெங்கும் ஒளிபரப்பி பெரும் பணி ஆற்றுகின்றன.
விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்கு துணை முருகா வெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
கோபுரங்களின் அழகு , தெய்வங்களின் அற்புதத் தோற்றம் , நேர்த்தியான நேரம் தவறாத வழிபாடு , சுத்தமான சூழல் , ஆறுமுகப் பெருமானின் , பழனி ஆண்டவனின் சண்முக தீத்தத்தின் அழகு என எண்ணில் அடங்கா அற்புதங்கள் தேவலோக காட்சியாகி பக்தர்களை மெய்மறக்கச் செய்கின்றது.
சிறப்பாக திருவிழாக் காலத்தில் ஆலய சூழலில் பொதுமக்களின் தேவைகளை நிறைவு செய்வதுடன் , குழந்தைகளையும் களிப்படையச் செய்யும் வணிகங்களினால் பொது மக்களின் பொருளாதாரம் வளர்வதுடன் , மாநகரத்தின் பொருளாதாரமும் வளர்ந்து , நாட்டுக்கும் பெருமளவான வெளிநாட்டு தனம் வர செல்வக்குமரனின் கண்காட்சி திருவிழா உதவுகின்றது.
காலத்திற்கு காலம் போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர்,ஆங்கிலேயர், வேறும் பல இனத்தவர்களால், மதத்தவர்களால் தமிழரின் கலை , கலாச்சாரம், பண்பாடு, மொழி, வாழ்க்கை, பொருளாதாரம் எல்லாம் அழிக்கப்பட்டு வந்தாலும் இன்றுவரை ஒரு இனம் தலை தூக்கி உறுதியாக நிற்கின்றது என்றால் அது இறைவன் அருள் அன்றி வேறில்லை.
நாளென் செய்யும் வினை தானென் செய்யுமெனை நாடி வந்த
கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங் குமரேசன் இரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையும் சண்முகமுந்
தோளும் கடம்புமெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
சைவத் தமிழர்கள் உலகின் எட்டுத் திசைகளிலும் இருந்து ஆவணி மாத கந்தனின் பெருவிழாவுக்கு நல்லூரை நாடி வருகின்றார்கள் . ஊர் விட்டுப் போனாலும் உறவு விட்டுப் போகாது. தாய் நிலம் நோக்கி வரும் பகத்தர்கள் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து ஈழத் தமிழரின் வாழ்க்கை முறையை , வரலாறு , கலை , கலாச்சாரம் , பண்பாடு, நாகரிகம் என்பனவற்றை காண்பிக்கின்றார்கள்.
முத்தமிழ் கடவுளாகிய முருகனின் கோயில் சூழலில் உலகில் உள்ள பல நாட்டவர்கள், பல இனத்தவர்கள் பெருவிழாவை காணக் கூடி உள்ளார்கள் இதனால் பல மொழிகளின் ஓசைகளுக்கிடையில் , கந்தனின் மணி ஓசையும் ஒலிக்கின்றது. எல்லோரும் தங்கள் தாய் மொழியில் பேசினால் நாங்கள் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழியாகிய சங்கத் தமிழ் மொழியால் ஒன்றிணைவோம்.
நீரால் , நெருப்பால் , கள்வரால் , பகைவரால் கவரமுடியாத கல்விச் செல்வத்தை உலகின் அறிவை , நாகரரீகத்தை அறிவியலை, , தொழில் நுட்பத்தை , பண்பாட்டை, இன்னும் பலவற்றை எங்கள் ஈழத்தமிழினம் பெற்று வளர்ந்து வருவதற்கு எங்கள் காங்கேயா உங்கள் பாதங்களுக்கு கோடான கோடி வணக்கங்களும் நன்றிகளும்.
யாமோதிய கல்வியு மெம்மறிவுந்
தாமே பெற வேலவர் தந்ததனாற்
பூமேன் மயல் போயற மெய் புணர்வீர்
நாமே னடவீர் நடவீரினியே
ஔவையின் வாக்குப்படி எண்ணும் எழுத்தும் கண்ணென வாழ்ந்த இனம். நீரளவே யாகுமாம் நீராம்பல் தாம் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு இதனை மறவாமல் பிள்ளைகள் ஒழுக்கத்துடனும், பண்புடனும் கல்வி கற்று பெருவாழ்வு வாழ சுவாமிநாத உங்கள் அருளை வேண்டி நிற்கின்றது ஈழத் தமிழினம்.
ஐக்கிய அமெரிக்காவில் காவேட்(Harvard) பல்கலைக்கழகத்தில் மொழி ஆராட்சி செய்யும் வெள்ளை இன பேராசிரியர் உலகின் முதல் மொழி தமிழ்மொழி என்று தனது மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றார். ஐக்கிய அமெரிக்காவில் , கனடாவில், பிரித்தானியாவில் மேலும் பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது. கனடாவில் அரச பாடசாலைகளில் சர்வதேச மொழிகளில் (International Languages) ஒன்றாக தமிழ் கற்பிக்கப்படுகின்றது.
கனடாவில் ஐந்தாம் வகுப்பில் தமிழ் கற்கும் மாணவர் ஒருவர் தனது சக மாணவர்களுக்கு தமிழ் தான் உலகில் மூத்த மொழி என்று கூறினார். அதற்கு மற்ற தமிழ் மாணவன் டைனசோர் (Dynasore)காலத்தில் தமிழ் மொழி இருந்ததா? என்று ஆசிரியரிடம் கேட்டார். அதற்கு ஆசிரியர் டைனசோர் காலத்தில் மனிதர்கள் இருந்தார்களா? என்று பார்க்க வேண்டும். மனிதர்களால் தானே மொழியை பேச முடியும் , எழுத முடியும் என்றேன். அதற்கு மற்ற தமிழ் மாணவன் டைனசோரே தமிழ்தான் பேசியது என்றார். இது நகைச்சுவையாக இருந்தாலும் பிள்ளைகளின்
மனதில் மொழிப் பற்று எந்த அளவிற்கு ஆழமாக பதிந்திருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
(குறள் 595)
நூலகத்தை அழித்தால் தமிழினம் கல்வியை இழந்து விடும் என்று நினைத்தார்கள். ஆனால் இன்று எமது மக்களும் , பிள்ளைகளும் இலட்சக் கணக்கான நூல்களையும், விதம் விதமான கல்வியையும் நினைத்துப் பார்க்க முடியாத அறிவையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும், தொழில்களையும் பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்திருப்பது எங்கள் கடவுள் பக்தி, நேர்மை , நீதி, கடுமையான உழைப்பு என்பனவற்றிற்கு கிடைத்த கடவுளின் வரமாகும். “தேமதுரத் தமிழழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.”
கச்சியப்பர், அருணகிரியார், யோகர் சுவாமி போன்ற பல புலவர்களாலும், அறிஞர்களாலும் பாடப்பட்ட முருகனுக்கும் ஔவைக்கும் சிறப்பான உறவு உண்டு. சுட்ட பழம் வேண்டுமா ? சுடாதபழம்வேண்டுமா ? என்ற கதை உங்களுக்கு தெரியும். பெரிய புலவர்களளின் பாடல்கள் மட்டுமல்ல , நாட்டார் பாடல்கள் பலவும் முருகனுக்கு உண்டு.நல்லூரானின் நாவல் பழ நாட்டார் பாடல் ஒன்று தாயார் கூறக் கேட்டிருக்கின்றேன்.தம்பியடா சின்னக் குட்டி தங்கைச்சியை எங்க விட்டாய்? நல்லூரான் தோட்டத்திலே நாவல் பழம் பொறுக்க விட்டேன்.
மூர்த்தி , தலம் , தீர்த்தம் என்ற எல்லாச் சிறப்புக்களையும் கொண்ட நல்லூர் கந்தனின் திருவிழாக் காலம் பக்தியும் , கண்கொள்ளா காட்சிகளும் கொண்டு பக்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதால் எல்லாத் திசைகளிலும் இருந்து மக்கள் நல்லையம்பதி நோக்கி அலை அலையாக வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
குறிஞ்சிக் குமரன் மலைகளிலும், குன்றுகளிலும் ( ஆறுபடை வீடுகள்) குடி கொண்டிருப்பதால் நல்லூர் கந்தனுக்கும் ஒரு குன்றும் , ஆறும் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனக்கண்களில் நினைத்துப் பார்ப்பேன். நல்லைக் கந்தனின் புகழ் குன்று போல் உயர்ந்திருக்க , ஆறுமுகனை நாடி வரும் மக்கள் வெள்ளம் ஆறு போல் ஓடிவர எல்லாப் புகழும் நல்லைக் கந்தனுக்கே.
ஜோதி மூர்த்தி. – Montreal Canada