மன்னார் நிருபர்
(06-09-2023)
காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நோக்குடன் மன்னார் பிரதேச செயலகத்தில் இருந்து அதிகாரிகள் அடையாள விளம்பரத்தை காட்சிப்படுத்தப்பட்ட போது காணி உரிமையாளர்கள், மக்கள் அவ்விடத்தில் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் இன்று புதன்கிழமை(6) காலை இடம்பெற்றது.
இச்சம்பவமானது பேசாலை மேற்கு (மன்-55) கிராம அலுவலகப் பிரிவில் தனியார் காணி பகுதியில் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நோக்குடன் மன்னார் பிரதேச செயலகத்தில் இருந்து அதிகாரிகள் இன்று புதன்கிழமை(6) காலை வருகை தந்து மன்னார் பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்ட மும்மொழி கொண்ட அறிவுறுத்தல் விளம்பரம் சம்பந்தப்பட்ட காணியில் பார்வைக்கு ஓட்டப்பட்டது.
குறித்த அறிவித்தல் பிரசுரத்தில் ‘மன்னார் காற்று மின் செயற்றிட்டம் இரண்டாம் கட்டமாக தேவையான புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மானிப்பதற்கு மே இக் காணி சுவீகரிக்க படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த காணி உரிமையாளர்கள், பேசாலை பங்குத்தந்தை அருட்பணி அன்ரன் அடிகளார் உட்பட இக்கிராம மக்கள் சிலர் சம்பவ இடத்துக்குச் சென்று காணி அபகரிப்புக்கு எதிராக குரல் எழுப்பினர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் மின் காற்றாலை அமைப்பதற்காக காணி அமைச்சிலிருந்து குறிப்பிட்ட காணியை அளவீடு செய்வதற்கு நோட்டீஸ் போடுமாறு மன்னார் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்த பட்டமையால் முதல் கட்ட நடவடிக்கையாக இது இடம்பெற்றுள்ளது.
ஆகவே இது தொடர்பாக காணி உரிமையாளர்கள் தங்கள் காணி என உரிமை கோரும் போது இப்பகுதி மக்களின் விருப்பு வெறுப்புகளை மன்னார் பிரதேச செயலாளர் ஊடாக எழுத்து மூலம் தெரிவிக்கும் பட்சத்தில் இது உயர் மட்டம் பரிசீலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.