நடராசா லோகதயாளன்
வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும்m உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், மக்களின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புகளை ஒழுங்கமைக்க ஐக்கிய நாடுகள் சபை பூரண ஆதரவை வழங்கும் எனவும் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் அவர்களை 05.06.2023 மாலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் நல்வாழ்வு தொடர்பில் திருப்திகரமான போக்கு காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் இந்த செயற்பாடுகளின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் வடமாகாணத்தின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததுடன், முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகி வாழ்ந்த வடபகுதி மக்கள் தற்போது சாதகமான நிலையை அடைந்து வருவதாகவும் இக்கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது. வளர்ச்சியின் இலக்குகளை நோக்கி, அந்த அடித்தளத்தை வலுப்படுத்த எதிர்காலத்தில் சிறந்த ஆதரவை வழங்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண பிரதம செயலாளர் திரு.சமன் பந்துல உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்றூ பிரான்ச் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் 05.09.2023 காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.