வி.தேவராஜ்.
மூத்த ஊடகவியலாளர்.
- லசந்த குறித்து கோதாபய மௌனம்.
சனல் 4 மீண்டும் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத நிலையில் நம்பகத் தன்மையுடன் கூடியவகையில் உலாவந்த கதைகள் தற்போது சனல் 4 அலைவரிசையால் உயிர்ப்புப் பெற்றுள்ளன. அந்தவகையில் சனல் 4 அலைவரிசையின் அண்மைய செய்தி இலங்கை அரசியலிலும் பொதுவெளியிலும் சர்வதேச அரங்கிலும் பேசு பொருளாகியுள்ளது.
- கத்தோலிக்க சமூகம்.
1919 ஈஸ்டர் தாக்குதலகள்;குறித்த சனல் 4 அலைவரிசையின் செய்திப் பெட்டகம் கத்தோலிக்க சமூகத்தினதும் மற்றும் பாதிக்கப்பட்டநிலையில் நீதி கோரி நிற்கும் உறவுகளினதும் குரலை உரத்து ஓங்கி ஒலிக்க வழிவகுத்துள்ளது. தமக்கான நீதி செத்துவிடவில்லை என்பதை கத்தோலிக்க உலகத்திற்கும் நீதி கோரி நிற்போருக்கும் தமது பயணத்தை மேலும் தொடர்வதற்கான சக்தியையும் தெம்பையும் கொடுத்துள்ளது. குறிப்பாக கத்தோலிக்க சமூகத்துக்கான நீதி நோக்கிய பயணத்தில் தலைமையேற்று அந்த சமூகத்தினரை வழி நடத்தி வருகின்ற கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு நீதி கோரிய பயணத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல அல்லது முன் நகர்த்த சனல் 4 அலைவரிசையின் செய்திப் பெட்டகம் உறுதுணையாக அமைந்துள்ளது.
அதேவேளையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஈஸ்டர் தாக்குதல் அரசியல் நலன்களை அடைந்து கொள்ள அரங்கேற்றப்பட்ட அரசியல் சதி நாடகம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் கத்தோலிக்க சமூகமும் கொண்டிருந்த எண்ணப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவும் சனல் 4 செய்திப் பெட்டகம் அமைந்துள்ளது.
- முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மறுப்பு.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இன் சமீபத்திய ஆவணப்படத்தின் உள்ளடக்கங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
மேலும் இந்த ஆவணப்படம் 2005 ஆம் ஆண்டு முதல் ராஜபக்சவின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் பெரும்பாலும் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.
- பொய்களால் நிரப்பப்பட்ட படம்.
முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்இ இதே சனல் ஒளிபரப்பிய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- லசந்த குறித்து அறிக்கை பேசவில்லை.
ஆனால் இந்த அறிக்கையில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப் பெட்டகத்தில் இடம்பெற்றுள்ள சன்டே லீடர் ஆசிரியர் லசந்த கொலைகுறித்த பதிவுகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கத்தோலிக்க உலகத்திற்கு தான் மேற்கொண்ட பணிகள்குறித்து விலாவாரியாக முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- வழமைபோல் பேச்சுப் போர்.
நாடாளுமன்றிலும் வெளியிலும் வழமைபோல் சனல்4 அலைவரிசை துகில் உரியப்பட்டு நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் செய்திப் பெட்டகத்தைப்போன்று ஈஸ்டர் குண்டு வெடிப்பு பெட்டகமும் காரசாரமான விவாதத்திற்குள் சிக்குண்டுள்ளது.
- சர்வதேச விசாரணை கோரும் தென்னிலங்கை.
முள்ளிவாய்க்கால் படுகொலைககள் குறித்த சனல் 4 அலைவரிசையின் ஆவணப் பெட்டகத்தை மறுதளிக்கும் தென்னிலங்கை அரசியல் களம் தமிழர்கள் கோருகின்ற சர்வதேச நீதி விசாரணையையும் மறுதளித்து நிற்கின்றனர்.
ஆனால் அதே அணியில் உள்ள ஒரு சாரார் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான தற்போதைய சனல் 4 அலைவரிசையின் ஆவணப் பெட்டகத்தில் அடங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கின்றனர்.
- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும். அதேவேளை தெரிவுக் குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவித்தள்ளார்.
‘சர்வதேச விசாரணை க்கு அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்,‘ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சாலி ஈடுபட்டுள்ளார் என நான் நம்புகிறேன். அவர் ராஜபக்ஷக்களின் கழிவறைகளை கழுவியவர். 2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டார்‘ எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
இதே நிலைப்பாட்டினையே எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
- சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.
2009 ஆம் ஆண்டு எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். ஆடைகள் களையப்பட்டு இளைஞர்கள் நீர்த் தடாகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களுடன் இசைப்பிரியாவும் அமர்ந்திருந்தார்.இதனை சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பு செய்திருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவீர்களா என்று நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
- எதிர்க் கட்சித் தலைவர் தெளிவுபடுத்த வேண்டும்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்குறித்து உள்ளக விசாரணையிலோ அல்லது தெரிவிக்குழுவிலோ தமக்கு நம்பிக்கை இல்லை.இவர்களால் உண்மைகளைக் கண்டறிய முடியாது.எனவே சர்வதேச விசாரணையே வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் நாடாளுமன்றில் கோரிக்கைவிடுத்துள்ளார்.முள்ளிவாய்க்கால் மற்றும் குருந்தூர் விவகாரங்களில் எதிர்க் கட்சித் தலைவரின் நிலைப்பாடு என்ன என்பதை எதிர்க் கட்சித் தலைவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சார்ள்ஸ் நிர்மலனாதன் எம்.பி கோரிக்கைவிடுத்தார்.
- பிளவுண்டுள்ள தென்னிலங்கை.
நாடாளுமன்றில் ஆளும் எதிர்க்கட்சி என ஈஸ்டர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் பிளவுண்டு இரு அணிகளாக நிற்பது போன்று பொதுவெளியிலும் குண்டு வெடிப்புக்கு நீதி கோரி ஒருபகுதியினரும் ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாக அதாவது சனல் 4 அலைவரிசைக்கு எதிராக மற்றொரு பகுதியினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைப்பு சனல் 4 அலைவரிசைக்கு எதிராக பிரித்தாணிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் மகஜர் ஒன்றும் தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
- தமிழ் முஸ்லிம் பொது மகன்களின் பார்வையில்.
சனல் 4 அலைவரிசையின் ஈஸ்டர் குண்டு வெடிப்பு பெட்டகம் குறித்து அமைதியாக அலசிக் கொண்டிருந்த தமிழ் முஸ்லிம் பொது மகன்களின் கருத்துக்கள் இவ்வாறு இருந்தன.
- தமிழ் மகன்
சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான ஈஸ்டர் குண்டு வெடிப்பு பெட்டகம் பொய்மையின் விம்பம் என்று கூறி கிடப்பில் போட்டுவிடுவர். முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தையே இன்றுவரை மறுதளித்து வருபவர்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஆவணப் பெட்டகத்தை ஏற்று சர்வதேச விசாரணைக்குப் போகும் நிலையில் தென்னிலங்கையின் மனநிலை இல்லை. போரினை வெற்றி கொண்டவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தென்னிலங்கை முன் வராது என்பதே தமிழ் மகனின் உள்ளக் குமுறலாக இருந்தது.
- முஸ்லிம் பொது மகன்.
‘முஸ்லிம் சமூகத்தையே பலிக்கடாவாக்கிவிட்டார்களே.சனல் 4 அலைவரிசைஉண்மையைப்போட்டுஉடைத்துள்ளது.தென்னிலங்கை இப்பொழுதாவது கண் திறக்குமா?’
- தமிழ் பொது மகன்
‘எங்கே கண் திறக்கும். சனல் 4 அலைவரிசைக்கு எதிராக வீதியில் இறங்கிவிட்டார்கள். இனி புலம்பெயர் தமிழர்கள் சனல் 4 அலைவரிசைக்குப் பணம் கொடுத்து ராஜபக்ஷக்களுக்கும் நாட்டுக்கும் எதிராக சதி செய்கின்றார்கள் என்று குற்றம்சாட்டுவார்கள்.கடைசியில் ஏதும் நடக்க வாய்ப்பிருக்காது.’
- முஸ்லிம் பொது மகன்.
‘ஆப்படி என்றால் எல்லோரும் சேர்ந்து படம் காட்டுகின்றார்களா?’ என்று வினவினார்.
- தமிழ் பொது மகன்
‘அப்படித்தான் நடக்கின்றது‘. ‘நடக்கப் போகின்றது‘.
நாட்டு நடப்பையும் இன்றைய யதார்த்தத்தையும் தமிழ் மற்றும் முஸ்லிம் பொது மக்கள் நன்றாகவே கணித்து வைத்துள்ளனர் என்பதையே இந்த உரையாடல்கள் உணர்த்துகின்றன.
மொத்தத்தில் மீண்டும் ஒரு உண்மை அரசியல் நலன்களுக்காக சாகடிக்கப்டப் போகின்றது.