நடராசா லோகதயாளன்
கடற்றொழில் அமைச்சரினால் மீனவர்கள் என பேச்சிற்கு தமிழ்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்பவர்கள் கட்சி எடுபிடிகளே அன்றி உண்மை மீனவர்கள் கிடையாது எனவே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தால் எம்மையும் அழைக்க வேண்டும் என உள்ளூர் மீனவ அமைப்புக்கள் சில இந்தியத் தூதரகத்திடம் முறையிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
உள்ளூர் மீனவர்கள் கடல் வழியாக தமிழ்நாட்டிற்குச் சென்று பேசப்போவதாக ஊடகங்கள் வாயிலாக அறிக்கையிட்டிருந்தனர். இருந்தபோதும் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஊடகங்களிற்கு கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் மீனவர்கள் கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் இலங்கை கடற்படையோ அல்லது இந்திய கடற்படையோ தடுக்க கூடும் அவ்வாறு தடைப்பட்டால் விமானத்தில் பயணிப்பர் எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விமானத்தில் பயணிப்பதற்கான செலவு தொகைக்காக மக்களிடம் இருந்து நிதியை பெறுவதற்காக உண்டியல் மூலம் நிதி வசூலிக்க திட்டமிடுவதாக ஒரு திட்டத்தையே அறிவித்துள்ளார். இதனால் அவர்களது அடுத்த திட்டம் என்ன என்பதனை அறிய முடிகின்றது.
இவற்றின் அடிப்படையில் கட்சி ஆதரவாளர்களை வடக்கு மாகாண மீனவர்கள் என அனுப்பி எம்மையும் சேர்த்து அவ மதிக்காது தமிழ் நாட்டில் பேச்சுக்கள் இடம்பெற்றால் அதில் எம்மையும் இணையுங்கள் எனக் கோரிக்கை விடுத்தே இந்திய தூதரகத்திடம் கோரிக்கை மனு கையளிக்கப்படவுள்ளது என மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.