மன்னார் நிருபர்
(15-09-2023)
கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினரும், மன்னார் மத்திய சுற்றாடல் அதிகார சபை, மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் நகர சபை இணைந்து இன்று (15) காலை 7.30 மணி தொடக்கம் 11.00 மணிவரை தாழ்வுபாடு மீன்பிடிப் பகுதி தொடங்கி கீரி கடற்கரை வரையான பிரதேசத்தில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வின் முதல் பகுதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி திருமதி. எம். மேரி அன்ரனிரா ‘கடற்கரை பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவம்’ முதலான விடயங்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துரையும் வழங்கப்பட்டது.
பின்னர், கீரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், வாழ்வுதயப் பணியாளர்கள், இலக்கு கிராம பயனாளிகள், அரச உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மீனவர்கள், நகரசபை ஊழியர்கள் உட்பட அனைவரும் சேர்ந்து கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப் பொருட்களை சேகரித்து துப்புரவு செய்தனர்.
சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் மன்னார் நகர சபையின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.