“எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும்- பண் நான்கும்
பண் நின்ற கூத்துப் பனினொன்றும் – மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொன்தொடி மாதவி தன்
வாக்கினால் ஆடு அரங்கின் வந்து”
என்று நம்மவர்களின் ஆடல் கலை பயின்று வரும் மாணவச் செல்விகளின் அரங்கப் பிரவேசம் பற்றி புகழ்ந்து எழுதவும் பாராட்டவும் தான் வேண்டும். அவ்வாறான பாராட்டுக்களைப் பெறுவதற்கு அவர்கள் எத்துனை கடினமான பயிற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதை கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மொன்றியால் மாநகரின் கொன்கோடியா பல்கலைக் கழகத்தின் ‘ஒஸ்கார் ‘ அரங்கில் நாம் கண்டோம். அந்த நாளில் ;பரத நர்த்தனாலயா’ அதிபர் ‘நாட்டியக் கலைமணி’ திருமதி மாலினி சுரேஸ்வரனின் மாணவிகளுள் ஒருவரான மொன்றியால் வர்த்தக அன்பர் சண்முகலிங்கம் (புரூட்ஸ் ஹபி) தம்பதியினரின் செல்வமகள் குமாரி சிவகாமியின் பரத அரங்கேற்றத்தின் முழுமையான காட்சிகள் எடுத்தியம்பின.
ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தவர்களால் ஆடப்பெற்றும் வளர்க்கப்பெற்றும் வந்த இந்த கலையையும் அதில் ஈடுபட்ட கலைஞர்களையும் இழிவாகப் பேசிய நிலையிலிருந்து மீட்டெடுத்து உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றவர்களான அம்மையார் பாலசரஸ்வதி அம்மையார் ருக்மணி ஆகிய இருவரையும் இந்த நேரத்தில் நாம் போற்றி வணங்குவோம்.
பரதத்தை தெய்வீகக் கலை என்ற தரத்திற்கு உயர்த்தியவர்கள் இந்த இருவரே ஆவார்கள்.
அரங்கேற்றச் செல்வி சிவகாமியின் அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக தாயகத்திலிருந்து வருகை தந்த திலக நர்த்தனாலயத்தின் அதிபர் ‘கலாபூசணம்’ திருமதி யசோதரா விவேகாந்தன் செல்வியை வாழ்த்திப் பேசும் போது ” ஆன்மீக உணர்வையும் ஆத்ம சுகத்தையும் தரவல்ல இக்கலையானது தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்றும் வேற்று இனங்கள் சார்ந்த கலைகளும் கலாச்சார விழுமியங்களும் மலிந்துள்ள புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழரின் பண்பாட்டுக் கோலங்கள் மற்றும் விழுமியங்களை பேணிக் காக்கும் பணியை இவ்வாறன அரங்கேற்றங்களும் அதற்கு துணைநிற்கும் இசை வடிவங்களும் ஆசிரியப் பெருந்தகைகளும் நிச்சயம் உயிர்ப்புடன் விளங்குகின்றார்கள் என்றே கூறவேண்டும்” என்று வாழ்த்திச் சென்றார்.
நடனப் பயிற்சி என்பது யோகக் கலைக்கு சமமானது. மனதை ஒரு நிலைப்படுத்த எடுத்துக் கொண்ட விடயத்தைப் பரிபூரணமாக கற்றுக் கொள்வது சிறந்த பயிற்சியாகும். இவ்விதமான கனமான பயிற்சிகள் கல்வியில் மாணவர்கள் மேன்மை பெறுவதற்கும் சிறந்த வழியாகும்.
மேலும் மொன்றியால் அருள் மிகு திருமுருகள் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் ஶ்ரீ வெங்கடேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.
ரொறன்ரோவிலிருந்து இந்தோ சிலோன் நடனப் பள்ளியின் அதிபர் திருமதி பத்மினி அன்றைய அரங்கேற்றத்திற்கு வாழத்துரை வழங்க அழைக்கப்பெற்றிருந்தார். அவர்கள் தனது உரையில்”குமாரி சிவகாமியின் அரங்கேற்றத்தில் புஸபாஞ்சலி- அலாரிப்பு-ஜதீஸ்வரம். கவுத்துவம்- பதவர்ணம்-பதம்- ஆகிய உருப்படிகளுடன் தொடர்ந்து தில்லாவுடன் நிறைவு பெற்றது.
அரங்கேற்றச் செல்வி சிவகாமி அவர்கள் தொடர்ந்து பரதக் கலையில் உள்ள உயர்ந்த அம்சங்களையும் கற்று கலை உலகிலும் வாழ்விலும் சிகரங்களைத் தொடுவதற்கு நடந்து முடிந்த அவரது அரங்கேற்றம் ஒரு வடிகாலாய் அமையும் என்று வாழ்த்துக் கூறி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமிழ் வாழ்த்துக்களைக் கூறி விடைபெறுகின்றேன்.
-வீணை மைந்தன்- மொன்றியால் – கனடா