“‘பெரிய’ நடிகர்களின் திரைப்படங்களை சில மாதங்களுக்கு ‘தள்ளி’ வைத்து விட்டு நம்மவர் வெண்திரைப்படங்களை வெற்றியடைச் செய்வோம். நமது கலைஞர்களுக்கும் நல்லாதரவு வழங்குவோம்”
நேற்று ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரின் வுட்சைட் சினிமாவில் நம் தமிழ் மண்ணின் தயாரிப்பாய் வெளிவந்துள்ள ‘பாலை நிலம்’ திரைப்படத்தை கண்டு களிக்கும்படி கிடைத்த அழைப்பை ஏற்று சரியாக திரைப்படம் ஆரம்பமாகிய அந்த நிமிடத்தில் சென்று ஆசனத்தில் அமர்ந்தோம்.
திரைப்படத்தின் பெயரே நம் மண்ணின் அவலத்தை எடுத்துச் சொல்லி ஒரு ஆர்வத்தைத் தூண்டியிருந்தது.
நம் தாயக மண்ணில் ஒரு கடலோரக் கிராமத்தின் பின்னணியில் தயாரிக்கப்பெற்ற முழு நீள திரைப்படமாக வெளி வந்துள்ள “பாலை நிலம்“ திரைப்படத்தின் ஆரம்பமே உற்சாகத்தையும் பரவசத்தையும் தந்தது. எழுத்தோட்டத்தின் போது எழுந்து நின்று பாராட்ட வேண்டும் போல இருந்ததற்கு காரணம் அதற்கு வழங்கப்பட்டிருந்த இசை தான் என்பதை உணரக் கூடியதாக இருந்தது.
கதை ஆரம்பமானது. நம் தாயக உறவுகளின் மனங்களைப் போன்று காய்ந்து வரண்டு போயிருந்த நிலமும் அந்த நிலம் சார்ந்த மக்களுமாக கதை நகர்ந்து கொண்டிருந்தது.
திரைப்படத்தின் இயக்குனரும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களும் எவ்வித அவசரமோ அன்றி ஆர்ப்பாட்டமோ இன்றி திரைப்படத்தை தயாரிப்பதில் ஈடுபாடு கொண்டு உழைத்திருக்கின்றார்கள் என்பதை ஒவ்வொரு காட்சியும் மாறும் போது நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட காட்சிகள் ரசிகர்களை உற்சாகப் படுத்துவதற்காக திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் படத்தின் கரு அதனை ஒரு திரைப்படமாக நகர்த்திச் சென்றதன்மை ஆகியன பாராட்டும் படியாக வலுவாய் அமைந்திருந்தன.
‘பாலை நிலம் திரைபடத்தின் கதை சோகத்தின் சுமைகளோடு நகர்ந்து செல்கின்றது , போர் சூழலில் தனது தாயை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்த கதையின் நாயகன் அங்கிருந்து தாயகம் நோக்கி தனது தாயிற்கு இறுதி கடமை செய்ய மீண்டும் வருகின்றார்.
அங்கு தனது தாய் மாமாவோடு இணைந்து முன்னாள் காதலியான கதாநாயகியைத் தேடுகின்றார். அந்த தேடலின் போது கடந்த கால காதல் நினைவுகள் மிகவும் கச்சிதமாகவும் யதார்த்தமாகவும் திரையில் காட்டிய இயக்குனரையும் இசையமைப்பாளரையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் பாராட்டவேண்டும்.
திரைப்படத்தில் முற்று முழுதாக எமது தாய் மண்ணின் வெறுமையும் அவலமும் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக காலைக் கடன் கழிக்கச் செல்வது கிணற்றில் வாளிகொண்டு தண்ணீர் அள்ளி குளிப்பது கடற்தொழிலின் போது இயல்பாக பகிரப்படும் நகைச்சுவை உரையாடல் எம் மண்ணின் ‘உற்சாகப் பானமாக விளங்கும் ‘கள்’ளை வேறு பட்ட மக்களோடு சேர்ந்து அருந்துவது போன்ற காட்சிகளை புலம் பெயர்ந்த எம் மக்களுக்கு ஞாபகமூட்டுவதை உணரக் கூடியதாக இருந்தது.
பொதுவாகக் கூறுவதானால் திரைப்படத்தின் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பெற்றபோது மிகுந்த அவதானத்தோடும் கவனிப்போடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
படத்தில் கதாநாயகன்-கதாநாயகி ஆகியோரின் காதல் செய்யும் காட்சிகள் எம் மண்ணில் யதார்த்த நிலைக்கு ஏற்ப அசிங்கங்கள் நிறைந்ததாக இல்லாமல் காதலின் ஆழம் மற்றும் அழகு ஆகியவற்றை அடக்கியதாக இருந்தமை இயக்குனரின் மிகுந்த கூர்மையான திரைப்பட ஆர்வத்தைக் காட்டி நின்றன.
கடலோரக் காட்சிகள் மற்றும் பசுமை நிறைந்த வயல் காட்சிகளை திரையில் காட்டிய போது எமது தாய் ம ண்ணின் கடல்வளம் நில வளம் ஆகியவற்றை துறந்து நாம் மேற்குலக நாடுகளில் எம் உழைப்பை வீணாக்குகின்றோமே என்ற ஆதங்கம் இயல்பாகவே எம்மிடத்தில் தோன்றியது.
திரைப்படத்தின் உரையாடல் எம் மண்ணின் மொழி சார்ந்து நின்ற விதம் திரைப்படத்தின் எழுச்சியைக் காட்டியது.
திரைப்படத்தில் பல இடங்களில் எமது தாய் மண்ணினதும் மக்களினதும் வாழ்வியல் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், பண்பாடுகள் எவையும் நிராகரிக்கப்படாமல் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது ‘பாலை நிலத்தின் தரத்தை அதிகரித்துள்ளது.
.
திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் உற்சாகத்தையும் உணர்வையுத் தருபவையாக அமையப்பெற்றுள்ளன. அத்துடன் . பாடல்கள் காட்சிகள் இடைச் செருகல்கள் போன்று இல்லாமல் அவசியமானவையாகவே தோன்றின. அவை திரைப்படத்துடன் இணைந்து பயணித்தையே அனுபவிக்கக்கூடியதாக இருந்தது.
இந்த திரைப்படத்தில் இயக்குநராக விளங்கும் ஜூட் சுகி அவர்களின் நேர்த்தியும் அர்ப்பணிப்பும் கொண்ட கடமை உணர்வு நன்கு பளிச்சிடுகின்றது.
இவர் எமது நண்பர் டென்மார்க் சண் அவர்களின் .திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதை அறியும் போது இன்னும் அவரைப் பாராட்ட வேண்டும் போல உள்ளது
திரைப்படத்தின் ஒளித்தொகுப்பும் சிறப்பாக உள்ளது. இசையமைத்து அதேவேளை ஒளித்தொகுப்பையும் நேர்த்தியாக செய்திருக்கிறார் பிரசாந்த் அவர்களையும் நாம் பாராட்ட வேண்டும்.
திரைப்படத்தின் மாமாவாக பாத்திரமேற்று நடித்த மகேந்திர சிங்கத்தின் அனுபவ முதிர்ச்சி நன்கு புலனாகின்றது . நாயகன், நாயகி மற்றும் நாயகியின் தோழி ஆகியோரின் நடிப்பையும் இன்னும் ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு ரசிகர்களாகிய மக்களிடம் தான் உள்ளது. அதுவும் புலம் பெயர் மக்களாகிய நாம் எமது தாய் ம்ணணில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பொருளாதார ரீதியாக வெற்றியடைவதற்கு நாலா பக்கங்களிலிருந்தும் உதவ வேண்டும்.
அதற்காக நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது இது தான். ஆம்! “‘பெரிய’ நடிகர்களின் திரைப்படங்களை சில மாதங்களுக்கு ‘தள்ளி’ வைத்து விட்டு நம்மவர் வெண்திரைப்படங்களை வெற்றியடைச் செய்வோம். நமது கலைஞர்களுக்கும் நல்லாதரவு வழங்குவோம்”” என்பதை எமது கடமையாக ஏற்று செயற்பட வேண்டும்.
சில சில குறைகளைத் தவிர்த்துப் நாம் “பாலை நிலம்” திரைப்படத்தை நோக்கினால் . இளம் வயதைக் கடந்த புலம்பெயர் மக்களான எமக்கு இந்த படம் நிச்சயம் பழைய நினைவுகளைத் மீட்டுத் தருவதாக அமைந்தது என்றும் தாயக உணர்வைத் தட்டி எழுப்பும் ஒரு சாதனமாக விளங்கும் என நாம் உற்சாகப்படுத்துவோம்.
கனடாவில் இந்த திரைப்படத்தை திரையிட முயற்சி எடுத்து அதில் வெற்றியீட்டிய கனடா மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்கள் சங்கத்திற்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!
கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்