தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9- வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் வெகு நெகிழ்வான தருணமாக, இளம் பாடகி ஹர்ஷினி நேத்ராவை, நேரில் பாராட்டி மகிழ்ந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
சாதி மறுப்பு திருமண தம்பதியின் மகள் ஹர்ஷினி நேத்ரா, எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி. விழுப்புரம் நகரைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது. சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி, பல புறக்கணிப்புகளைத் தாண்டி, தங்கள் மகள் ஹர்ஷினி நேத்ராவை இசையில் ஊக்கப்படுத்தி வருகின்றனர் அந்த தம்பதி. தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா அனைவரையும் கவர்ந்து வருகிறார். இயக்குனர் மாரி செல்வராஜ் அவரை கட்டியணைத்துப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது: ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது, நம் கருத்து அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று தான் உருவாக்குகிறோம், உண்மையில் இன்றைய தலைமுறை அதைப்புரிந்து கொள்வதை நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த குடும்பம் என்ன வலி அனுபவித்திருக்கும், இந்த குழந்தை என்ன மனநிலையில் இருப்பாள் என்பது எனக்குத் தெரியும், நானும் மேடைக்காக ஏங்கியவன் இன்று இந்த குழந்தை தன் உழைப்பில், இந்த மேடையைப் பெற்றிருக்கிறாள் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. யாருக்கும் பயப்படாமல், எந்த தடை வந்தாலும் கவலைப்படாமல் முன்னேறிப்போக வேண்டும் என ஹர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.