வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- இலங்கை ,இந்தியா, சர்வதேச சமூகம் உற்பட தமிழ்த் தலைமைகளும் கூட்டுப் பொறுப்பின ஏற்க வேண்டும்.
- ஆட்சி அதிகாரத்துக்காக சிங்கள ஆளும் வர்க்கம் எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயங்காது.
தமிழ் மக்களும் தமிழர் போராட்டமும் காட்டிக் கொடுப்புக்களாலும் துரோகத்தனத்தாலும் பலியாகிய பல சம்பவங்களை கடந்த 75 வருடகால வரலாற்றில் பதிவுகளாக கொண்டுள்ளது.. இத்தகைய காட்டிக் கொடுப்புக்களிலும் துரோகத்தனங்களிலும் மிதவாதத் தலைமைகள் உற்பட விடுதலைநோக்கி களம் இறங்கிய இளைஞர் குழாங்களையும் இந்த நோய் பற்றிக் கொண்டது. விதிவிலக்கின்றி தமிழர் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காலத்துக்குக் காலம் சிறு சிறு துளிகளாக கிளைவிட்டுப் பரவிய இத்தகைய குருவிச்சைகளினால் தமிழினம் சந்தித்த இழப்புக்கள் கணக்கில் அடங்காதது.
- ‘பிரபாகரனைப் பலவீனப்படுத்துவது என்பது தமிழினத்தை வேருடன் பிடுங்கிச் சாய்ப்பதற்குச் சமன்‘
ஆனால் இந்த இழப்புக்களால்தமிழினம்சோர்ந்துபோய்விடவில்லை.அமைதியாக மூலையில் முடங்கிவிடவும் இல்லை. அந்த இழப்புக்களையும் சுமந்து கொண்டு மீண்டெழுவதே வரலாராக உள்ளது.
2004ஆம் அண்டில் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து வெளியேறியபோது ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பலவீனப்படுத்துவது என்பது தமிழினத்தை வேருடன் பிடுங்கிச் சாய்ப்பதற்குச் சமன்‘ என்று வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதப்பட்ட எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
கருணாவின் வெளியேற்றத்துடனும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பிரகடனப்படுத்திய ‘மனிதாபிமானத்துக்கான போரினை‘ இந்தியா உற்பட சர்வதேசமும் இணைந்து தலைமையேற்று ‘வெற்றியினை‘ இலங்கை;கு பரிசாக வழங்கின.
அவ்வேளையில் புதிய இலங்கை மலரப்போவதாகவும் ஜனநாயகம் தழைத்தோங்கப்போவதாகவும் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவு விமோசனம் பிறக்கப் போவதாகவும் பிரசாரப் பீரங்கிகள் இதற்கு சார்பானவர்களால் முழங்கப்பட்டன.
- நரிகளாகக் காத்திருந்த தமிழ்த் தலைமைகள்.
அதேவேளையில் தமிழ் மக்கள் ‘மனிதாபிமானத்துக்கான போரில்‘; கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது இந்தக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முன்வராது அமைதி காத்து மனிதாபிமானத்துக்கான போர் ‘தமிழர் அரசியலில் தமக்கான விடியலைத் தரும்‘ என்ற எதிர்பார்ப்பில் தமிழ்த் தலைமைகள் சிங்களத்தின் கொலைக் களத்தின் ஓரத்தில் நரிகளாகக் காத்திருந்தனர். உண்மையில் முள்ளி வாய்க்காலில் கொட்டிய குருதிகளுக்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகம் மற்றும் இந்தியா என்பன கூட்டுப் பொறுப்பினை ஏற்றாக வேண்டும். இந்தக் கூட்டணியின் பங்காளிகளாக தமிழ்த் தலைமைகளும் இருந்துள்ளன என்ற வகையில் இவர்களும் இதற்கான பதிலைக் கூற வேண்டும். இவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
அனைத்துமே இவர்கள் எதிர்பார்த்தது போன்று நிறைவேறியது.
–இலங்கை அரசாங்கம் இந்தியா மற்றும் சர்வதேசத்தின் உதவியுடன் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
–தமிழ்த் தலைமைகள் தமிழர் அரசியலில் ‘கிங் மேக்கர்களாக‘ தம்மைத் தாமே முடி சூட்டிக் கொண்டனர்.
–கருணா பிள்ளையான் உற்பட இணக்க அரசியல் நடத்துபவர்கள் மகிந்த அணியினரின் செல்லப் பிள்ளைகளாயினர்.
ஆனால் தமிழ் மக்கள் ‘வேருடன் பிடுங்கிச் சாய்க்கப்பட்டுவிட்டனர்‘;.
–கருணா பிள்ளையான் மற்றும் இணக்க அரசியல் நடத்தபவர்களால் தமிழ் மக்களின் வாழ்வில் விடியலோ விமோசனமோ பிறக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் ‘மனிதாபிமானத்தக்கான போரினை‘ உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமையேற்று நடத்தி வெற்றியை ஈட்டிக் கொடுத்த இந்தியா உற்பட சர்வதேச சமூகத்தினாலும் இலங்கை மண்ணில் ஜனநாயகத்தையோ அல்லது தமிழ் மக்களுக்கான விடியலையோ பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
கருணா பிள்ளையான் போன்றோர் தமிழ் மக்களின் விடுதலைக்காக இலங்கை ஆட்சியாளர்களுடன் குறிப்பாக மகிந்த ஆளும் வர்க்கத்துடன் இணையவில்லை. தத்தமது நலன்களுக்காக விலை போனவர்கள்.எனவே இவர்களால் தமிழ் மக்களுக்கு விடுதலை விடிவு விமோசனம் என்பன கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அதேபோல் இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானத்தக்கான போருக்கு உடந்தையாக நின்ற இந்தியா மற்றும் சர்வதேச சமூகமும் உண்மையில் இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் தமிழ் மக்களுக்கு விடுதலை விமோசன் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக போர் நடத்தவில்லை.
ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்கா வெளியேறிய போது அமெரிக்க ஜனாதிபதி பைடன்
‘ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது அமெரிக்காவின் வேலை அல்ல‘ என்று குறிப்பிட்டார்.
அதேபோல்தான் இந்தியாவும் சர்வதேச சமூகமும் தத்தமது நலன்களுக்காகவே தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கைப் போரில் பங்கெடுத்தன. எனவேதான் தமக்கான நலன்களை இலங்கை ஆட்சியாளர்களிடம் இருந்து தற்போது கறந்து வருகின்றனர்.
இந்த சக்திகளின் நகர்வுகளுக்கு கர்த்தாவாக இருக்கின்ற தமிழ் மக்கள் தெருவில் நிற்க போர் நடத்தியவர்களும் போரில் பங்குபற்றியவர்களும் காட்டிக் கொடுத்தவர்களும் பலன் பெறுகின்றனர்.
மனிதாபிமானத்துக்கான போரில் இலங்கை ஆட்சியாளர்களினதும் இந்தியா உற்பட சர்வதேச சமூகத்தினதும் தத்தமது நலன் நோக்கிய வாக்குறுதிகளை உள் இழுத்து தமிழ் மக்கள் கொலைக் களத்தில் செத்துக் கொண்டிருக்க அமைதி காத்த தமிழ்த் தலைமைகளும் வடக்குக் கிழக்கில் வெறுமையாகிய தமிழர் அரசியலை பங்குபோடுவதில் இன்றுவரை குடும்பி பிடி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களாலும் தமிழ் மக்களுக்கு விடிவோ விமோசனமோ வருவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலை நோக்கிய பயணத்துக்கான எவ்வித தீர்வுப் பொதிகளும் இன்றி வெறும் கையுடன் நிற்கும் இவர்கள் நாடாளுமன்றம் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தம்மையும் தாம் சார்ந்தவர்களையும் வெற்றி பெறச் செய்துவிடுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சி அரசியல்.
2009 இல் போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதற்கென யாப்பையும் உருவாக்கி வெளிப்படைத் தன்மையுடனான நிதி கட்டமைப்பையும் உருவாக்கி அனைத்து தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கிய பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அவ் வேளையில் முன் வைக்கப்பட்ட போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையால் தொடர்ச்சியாக அது நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சியினர் இதற்கு எதிராக இருந்தனர்.
தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெயரில் அரசியல் நடத்தி தனது அரசியல் பாதையைப் பலப்படுத்தும் இலக்கை நோக்கிப் பயணிக்க முயல்கின்றது. இது இறுதியில் தமிழர்களுக்கென உள்ள அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்துவிடும் என இந்தக் கட்டுரையின் பத்தியாளரால் தொடர்ச்சியாக அவ் வேளையில் எழுதப்பட்டது. ஆனால் பத்தியாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதாகவும் தமிழ் மக்களிடையே உள்ள ஜனநாயக அமைப்பை இல்லாதொழிக்கப் பார்ப்பதாகவும் இன்னொரு தீவிரவாதத்துக்கான விதைகளைத் தூவுவதாகவும் அயலக தூதரகத்தின் உதவியுடன் பத்தியாளரை ஊடகத்துறையில் இருந்தே அகற்றினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் அதற்கென யாப்பு உருவாக்கப்பட வேண்டும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அண்மையில் விடுத்திருந்ததை இங்கு பதிவு செய்தல் பொருந்தும்.
- கூட்டமைப்பு சிதைந்தது.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதே இதற்குச் சான்றாகும்.உண்மையில் எதிர்பார்த்தது போன்று தமிழரசுக் கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்துவிட்டதை இன்று வரலாறு பதிவு செய்துள்ளது.
- மொத்தத்தில் தமிழ் மக்களை விடுவிப்பதற்காக இலங்கை ஆட்சியாளர் பிரகடனப்படுத்தி நடத்திய ‘மனிதாபிமானத்துக்கான போh’; தமிழ் மக்களை விடுதலை செய்யவில்லை.
- தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா பிள்ளையான் மற்றும் இணக்க அரசியல் நடத்துபவர்களாலும் தமிழர் விவகாரத்தில் விடுதலை நோக்கி ஒரு துரும்பைத்தானும் நகர்த்த முடியவில்லை.
- மனிதாபிமானப் போருக்கு அணி திரண்டு ஆதரவு வழங்கி தமிழ் மக்களுக்கு எதிராகப் போரினையும் நடத்தி இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்த இந்தியா உற்பட சர்வதேசமும் தமிழர் விவகாரத்தில் ஏதும் செய்ய முன்வரவில்லை.
முள்ளி வாய்க்காலில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது அமைதி காத்த சர்வதேச சமூகம் ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பலியான தமது நாட்டு குடி மக்களுக்காகவும் உலக கத்தோலிக்க சமூகத்திற்காகவும் சர்வதேச விசாரணை கோரி நகர்கின்றனர். இந்த நகர்வுகள் மறுபுறம் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்கால அரசியல் நலன்களுக்கான நகர்வுகளாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
ஆட்சி அதிகாரத்துக்காக சிங்கள ஆளும் வர்க்கம் எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயங்காது.
- அதே வேளையில் கடந்த 75 வருடங்களாக இனவாதத்தை வைத்து சிங்கள மக்களிடையே மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய சிங்கள ஆளும் வர்க்கம் 2009 இல் போர் மொளனமாக்கப்பட்டதையடுத்து இனவாதமும் ‘போர் வெற்றி வெறியும்‘ அரசியல் மூலதனமாக தென்னிலங்கையில் எடுபடாத நிலையில் பாதுகாப்பு என்ற போர்வையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்தி சிங்கள ஆளும் வர்க்கம் ஆட்சிபீடமேறியதை சனல் 4 வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இது ஆட்சி அதிகாரத்துக்காக சிங்கள ஆளும் வர்க்கம் எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயங்காது என்பதை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பதிவு செய்தள்ளது.அதாவது தமது அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகக் கொன்றொழித்த சிங்கள ஆளும் வர்க்கம் தற்போது சிங்கள மக்களையே பலி எடுக்கத் துணிந்துவிட்டது என்பதையே ஈஸ்டர் குண்டு வெடிப்பும் அரகலயா மக்கள் எழச்சிக்குப் பிந்தைய தென்னிலங்கை நிகழ்வுகளும் துலாம்பரமாகக் காட்டி நிற்கின்றன.
மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஆட்சியாளர்களின் மனிதாபிமானத்துக்கான போரினை வழி நடத்தி அதில் பங்குபற்றி வெற்றியினை தங்கத் தட்டில் வைத்து இலங்கையின் ஆட்சியபாளர்களுக்கு வழங்கிய இந்தியாவும் சர்வதேச சமூகமும் தமிழ் மக்களை மாத்திரமல்ல தென்னிலங்கை சிங்கள மக்களையும் சிங்கள அளும் வர்க்கத்தினரிடம் தாரைவார்த்துக் கொடுத்தள்ளனர்.
அதற்கும் அப்பால் அரகலய எழச்சிக்குத் துணை நிற்பதாக பாசாங்கு காட்டி மீண்டும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பிடிக்குள் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் தள்ளிவிடும் நகர்வினையே சர்வதேச சமூகம் மேற் கொள்கின்றது.
மகிந்த ஆளும் வர்க்கத்திற்கு மாற்றீடாக ரணில்விக்ரமசிங்க ஆளும் வர்க்கம் என்ற சர்வதேசத்தின் சூத்திரம் இதனையேக் காட்டி நிற்கின்றது. இதே பாணியிலேயே தமிழர் அரசியலையும் இந்தியாவும் சர்வதேசமும் உருவாக்குகின்றது.
தமிழர் அரசியலும் தென்னிலங்கை அரசியலும் பழைய போத்தலுக்குள் அடைக்கப்பட்ட பழைய கள்ளாகவே பயணிக்க உள்ளது. அதாவது சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையின் 75 வருட கால சிங்கள ஆளும் வர்க்க எஜமானர்களையே ஆட்சியில் வைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் காய்களை நகர்த்துகின்றனர். இதனை மாற்றும் சக்தி படைத்தவர்கள் மக்கள் மாத்திரமே.
சர்வதேச விசாரணை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அனால் சர்வதேச விசாரணை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது. முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நவாலி தேவாலயத்தின் மீதான விமானக் குண்டு வீச்சு என தமிழ் மக்கள் மீதும் தமிழ் மண்ணிலும் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம் மற்றும் பேரினவாதம் புரிந்த தொடர்ச்சியான கொலைகள் அழிவுகள் குறித்தும் சர்வதேச விசாரணை மெற் கொள்ளப்பட வேண்டும்.