தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தத் தாக்குதல்கள் அரசாங்கத்தினது ஏற்பாட்டிலேயே நடைபெற்றன என்பதையும், பொதுஅமைதியைக் குலைக்கின்றது என்பதைக்காட்டி நினைவேந்தல்களைத் தடுப்பதற்கான அவர்களின் ஏற்பாடு இது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன்.
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இருவேறு இடங்களில் வைத்து தியாகதீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீதும் சிங்களக் காடையர்கள் பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுவதற்கான முயற்சிகள் ஒருபுறம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, பாதுகாப்பு வேலிக்கு நிதி ஒதுக்கப்பட்டமையை தவறு என்று நிரூபிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மறுபுறம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்களை முன்னெடுப்பதால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிஸார் காரணங்களை முன்வைப்பதற்கு ஏதுவாக சிங்களக் காடையர்களை ஏவிவிட்டு நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடந்தால் இவ்வாறான அமைதியின்மை ஏற்படும் என்பதை நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிக்கையிடுவதற்கு வசதியாகவே திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
காந்தி கூட செய்யத் துணியாத ஓர் அஹிம்சைப்போராட்டத்தை கண்முன்னே நடத்திக்காட்டி பாரத தேசத்தின் தோலுரித்தவன் தியாக தீபம் திலீபன் அஹிம்சாவாதியை நினைவுகூருவதற்கே இந்த நாட்டில் இடமில்லை. அஹிம்சைக்கு வன்முறையால் சிங்களக் காடையர்கள் பதிலளித்திருக்கின்றார்கள்.
தந்தை செல்வா அன்று அஹிம்சையால் போராடியபோது சிங்களக் காடையர்கள் தாக்கியதால்தான் ஒரு கட்டத்தில் தமிழர்கள் திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள் என்ற வரலாற்றை 14 ஆண்டுகளில் மறந்துவிட்டார்கள்போலும்.
சிறிலங்கா பொலிஸ் எப்போதும் பௌத்த – சிங்கள பேரினவாதத்தின் அடிவருடிகளாகவே இருக்கின்றனர் என்பதற்கு அவர்கள் கண்முன்னால் நடந்த தாக்குதல் மிகச் சிறந்த உதாரணம்.
பாதுகாக்கவேண்டிய பொலிஸாரே காடையர்களுக்கு ஒத்தாசை புரிந்தமையால்தான் இந்த நாட்டில் ஆயுதப்போராட்டம் முகிழ்ந்தது என்பதையும் மறந்துவிட்டார்கள்.
தேர்தல் வெற்றிக்காக சொந்த மக்களையே கொலைசெய்த கொடூரர்கள் ஆட்சியில், மீண்டும் இனவாதம் விதைக்கப்படுகின்றமை தெளிவாகத் தெரிகின்றது.
தேர்தலுக்காக விதைக்கப்படும் இனவாதம் இலகுவில் அடங்காது. இந்த நாடு மீண்டும் ஓர் குருதிக் களரியை நோக்கியே செல்லப்போகின்றது என்பதற்கே கட்டியம்கூறுவதாகவே நேற்றைய சம்பவம் நடைபெற்றிருக்கின்றது, என்றுள்ளது.